ராஜம் கிருஷ்ணன்
73
ஆண்டு ஊக்கமாகச் சாமி கும்பிட, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விடுகிறது.
பரபரவென்று அன்றாட வேலைகளை முடித்து, வீடுமெழுகி துடைக்கிறாள். தலை முழுகி, வேறு சீலை மாற்றிக் கொள்கிறாள். சுவரில், சாமி கும்பிடும் இடத்தில், மஞ்சட் குங்குமம் கொண்டு வட்டமும் சதுரமுமாகச் சாமி சின்னம் வைக்கிறாள்.
அடுப்பில் இட்லிக்கு ஊற்றி வைத்துவிட்டு, அரியு மனையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ரேடியோவில் உழவர்களுக்கு ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைவு வருகிறது. சாந்திதான் இதை நினைவுபடுத்துவாள். 'அக்கா, காலம சொல்லுவாங்க. இன்னிக்கு எப்படி வானிலை இருக்கு. இந்தப் பருவத்தில் என்ன போடலாம், எப்படிப் பயிர் பராமரிப்பு பண்ணலாம்னு சொல்லுவாங்க... ன்னு, கேளுங்க...’ என்பாள். ஆனால் செவந்திக்கு ஏனோ அந்த ரேடியோவே பிடிப்பதில்லை.
“சரோ... ஏ. சரோ...? அந்த ரேடியோவை எடுத்திட்டு வாங்கே?”
சரோ வரவில்லை. அம்மாதான் சாமான்களைத் துலக்கிக் குறட்டில் கொண்டு வந்து கவிழ்த்துகிறாள். முற்றம் நசநசவென்றிருக்கிறது.
"எதுக்கு இப்ப ரேடியோ? உனுக்குத்தாம் புடிக்காத?” என்று முணுமுணுத்தவாறே சரோ ரேடியோவை எடுத்துக் கொண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு வருகிறாள்.
“இந்தா...!”
“நீவையி. உழவர்களுக்கு ஒரு வார்த்தை...”
அவள் திருப்புகிறாள். பாட்டு வருகிறது. அப்பள விளம்பரம் வருகிறது...
“எத்தினி மணிக்கு அது வரும்?”
“உனக்குத் தெரியாதா? சாந்தி சொல்லிச்சி, நிதம் கேளுங்கக்கா, அது நமக்கு உபயோகமாயிருக்கும்னு...”