பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கோடுகளும் கோலங்களும்


அவள் வாசலுக்கு விரைகிறாள்.

“பாப்பாம்மா சொல்லிச்சி. அமாவாசக் கூட்டம் காக்கனேரில. உங்கள வரச் சொல்லிச்சி...”

“சரி, போங்க, அமாசிக்கு எத்தினி நாளிருக்கு?” அவள் உள்ளே வரும் போது ரங்கன் அந்த ரேடியோவைத் தூக்கி எறிகிறான். அது முற்றத்தில் போய் சத்தத்துடன் விழுகிறது. உடைகிறது.

அவள் விக்கித்து நிற்கிறாள்.

“நா ஓராளு தலவலி மண்ட உடய்க்கிதுன்னு வந்து உக்காந்திருக்க. நீ இத்த அலறவுட்டுப் போட்டு எவனையோ பாக்க ஒடுற! நானும் பாத்திட்டுதானிருக்க. உனக்கு வர வரத் திமுரு ரொம்பப் போவுது. புருசன், வீடுன்னு மதிப்பு இல்ல. நினைச்ச நேரத்துக்கு வார, நினைச்ச நேரத்துக்குப் போற! மானம் மரியாதியுள்ளவ அர நேரம் தங்க மாட்டா...!”

எழுந்திருந்து முகம் கடுக்கப் போகிறான்.

9


னசே சரியில்லை.

அவன் கோபித்துக் கொண்டு சென்ற போது இவளுக்கும் வீறாப்பாக இருந்தது. ரேடியோவைப் போட்டு உடைக்க வேண்டுமென்றால்.. அதுவும் அவன் ஆசையாக மகளுக்கு வாங்கிக் கொடுத்தது. அதை இவள் உபயோகிக்கக் கூடாதென்றா?

இல்லை. பெண் பிள்ளை. சம்சாரம், தலை தூக்கக் கூடாது. அவளை மதித்து யாரும் வரக் கூடாது. இவனுக்குப் பிடிக்காதது, அவளுக்கும் பிடிக்கக் கூடாது. சரோவுக்குத்தான் இழப்பு.