பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கோடுகளும் கோலங்களும்

“அரைஞாண் ஒண்ணு மட்டும் முப்பது பவுனாம்!”

செவந்திக்கு எரிச்சல் பீரிட்டுக் கொண்டு வருகிறது.

“நீங்க பாத்தீங்களா?”

“இவ எதையும் நம்ப மாட்டா! பாத்தவங்க சொன்னாங்க. சினிமாக்கார ரசிகர்மன்றச் செயலாளர். இது பெரிய பவுருள்ள பதவியில்லியா? அதா... யார் கொள்ளிக் கண்ணோ, அடிச்சிப் போட்டது.”

சுந்தரி குழந்தைகளைச் செவந்தியிடம் விட்டுவிட்டுச் சாவுக்குப் போவதாகத் தீர்மானமாகிறது. அம்மா கிளம்புகிறாள். சும்மாப் போக முடியுமா?

மேலவீதி ஆண்டாளம்மா வீட்டில், சரோவுக்குப் பண்ணி வைத்ததோடு குடை சிமிக்கியை வைத்து இருநூற்றைம்பது வாங்கி வருகிறாள்.

ஆண்டாளம்மாவுக்கு ஒரே பையன். பட்டணத்தில் முருகன் போல்தான் படித்தான். படிக்கும் போதே கலியாணமும் கட்டிக் கொண்டான். இரண்டு பேருமாக எங்கோ ஆப்பிரிக்க நாட்டில் டீச்சர் வேலை பண்ணுகிறார்கள். பத்துவயசுப் பேரனை வைத்துக் கொண்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் - பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறாள். புருசன் ஒரு வேலையும் செய்ய மாட்டான். இரண்டு ஏக்ரா போல் காணிகரை உண்டு. அதில் பயிர் பண்ணிச் சம்பாதிப்பதை விட, இது சுவாரசியமாக இருக்கிறது. எத்தனை வங்கிகள் வந்தாலும் ஒரு முட்டுக்கு சேட்கடைக்குப் போவதைப் போல ஆண்டாளம்மா இவர்கள் தேவைகளுக்கு உதவுவாள். முழுகிப் போகும் பொட்டு பொடுசு தங்க நகைகளை, வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தால், கிரயம் போட்டுத் தருவாள். கூலி, போன்ற தள்ளுபடியும் கிடைக்கும். மகன் மூலமாக, தங்கம் கொண்டு வந்து நகை விற்கிறாள் என்ற பேச்சும்கூட அடிபட்டதுண்டு.

அம்மாவுக்கு அழுது மூக்கைச் சிந்தப் பிடிக்கும்; போகிறாள்.