பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

87

“யம்மா நா, ரீட்டா வீட்டில படிக்கப் போற. சோறு போடு..” என்று சரோ தட்டைப் போட்டுக் கொள்கிறாள், மாலை ஆறு மணிக்கே.

பசுவுக்குச் செவந்தி பருத்திக் கொட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.

“வெளக்கு வச்சிருக்கு. இப்பதா இங்கேந்து படிச்சாப் போதும்; விளக்கு வச்சு யார் வீட்டுக்கும் படிக்கப் போக வேணாம்.”

“போம்மா! இங்க ஒரு ரேடியோ கூட இல்ல. நான் ரீட்டா கூடச் சேந்து படிப்பேன்! எங்க சயின்சு டீச்சரு தங்கச்சி. என் கிளாஸ்ல தான் படிக்கிறாள்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் அப்பா ஊரில் இல்ல. மேசரான பொண், யாரு வீட்டிலியோ, கிறித்தவங்க வீட்டில பொழுது போயி அனுப்ப மாட்டேன்.”

சரோ, கன்றுக்குட்டி திமிறுவது போல் குதிக்கிறாள்.

"யாரோ இல்ல.. எங்க டீச்சர் வீடு! யம்மா, நான் படிக்கணும். டென்த்ல நிறைய மார்க் எடுக்கணும். பிளஸ் டு படிச்சி என்ஜினியரிங் படிக்கணும்..”

“வெளக்கு மாத்துக்கட்ட. பொம்புளப்புள்ளக்கி இதுக்கு மேல ஒரு காசு செலவு பண்ணமாட்ட, தெரிஞ்சிக்க கழனிக்காரன் வீட்டில பெறந்தவ. சேத்துல எறங்கி நாத்து நடக் கத்துக்க. அதான் சோறு போடும்! பருத்திக் கொட்டயும் புண்ணாக்கும் கலக்கி மாட்டுக்கு வச்சிப் பராமரிக்கக் கத்துக்க! அதான் நமக்கு சோறு போடும். படிச்ச பய்யனே கிழிக்கல. நீ இன்னொருத்தன் வீட்டில போய் குப்ப கொட்டணும். ஒரு நா, அடுப்பாண்ட வாரதில்ல, ஒரு காபி வச்சிக் குடுக்கத் துப்பில்ல. என்னமோ ராசாவூட்டுப் புள்ள போல உக்காந்து, சோறெடுத்து வையின்னு அதிகாரம் பண்ணுற?”

“யம்மா என்ன நீ? நான் இப்ப படிக்கக் கூடாதுன்னா, அப்ப ஏன் படிக்க வச்சே? நீ சோறெடுத்துப் போட வேணாம். நானே போட்டுக்கறேன். ..” அவள் அடுப்படிக்குச் சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் வைத்துக் கொள்கிறாள்.