உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

199

“கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது,” என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.

வேறு வழியின்றி கருப்பையா ஒப்புக் கொண்டான்.

மறுதினம் ஆயிரம் ரூபாய். (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.

உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர்.

வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, ராதா கருப்பையா, மர்மக் காதலைப் பற்றிக் கண்டு கொண்டதாக, ராதாவின் புருஷனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“கண்ணே ராதா, போய்வரட்டுமா? ஆண்குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு; பெண் பிறந்தால் பிருந்தா! கவனமிருக்குமா,” என்று கொஞ்சினாள் கோகிலம் ராதாவிடம்.

ராதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பிவைத்தார். பின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும், பாபம்!

கருப்பையாவுக்கும், ராதாவுக்கும் மாதாமாதம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.

கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம். எந்தக் கணக்கை எப்படி மாற்றுவது, எப்படி சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.

வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துக்களைக் கொஞ்சங் கொஞ்சமாக கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடி கருப்பையாவிடம் தந்து வந்தாள் ராதா.