உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

141

“நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே” என்று எண்ணும்போது ராதாவின் நெஞ்சு “பகீர்” என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது. ஒரு ஆண் குழந்தையும் ராதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின், கணக்குப் புரட்டுகளும், ராதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இருவருக்கும் இடையே சச்சரவுகள் அதிகரித்தது. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, ராதா புருஷனின் அபின் தின்னும் வழக்கம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

இதே நேரத்தில் கருணாநந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனசோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன் காவி பூண்டு கருணாநந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது.

யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். “ஊரை ஏய்க்க, உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக் கொண்டு, விபரீதச் செயல் புரிவதா?” என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்தாலும் இப்படிப்பட்டவனிடம் சிக்கி, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே” என்று வருந்தினான்.

“நான் என் நிலைமையைப் பற்றி மட்டுமே கவனித்தேன். என் சுகம் மன ஆறுதல்! என் அமைதியைப் பற்றி அக்கரை கொண்டேனேயன்றி, என்னிடம் காதல் கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானான்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்க வேண்டும்? அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை! எனவேதான், கோணல் வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான்.