160
கபோதிபுரக்
கொடுத்தேனே யொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே “வம்பாக” வந்து முடிகிறது. என் எழுத்து போலும்” என்று கூறி தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், ராதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள், நல்ல நகை நட்டுடன் நாலு பேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் ராதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் கணவனுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரைஏறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! ராதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப் படகு ஓட்டையுள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்ல முடியும். அந்த ஓட்டை படகுக்கு கருப்பையா ஒட்டுப் பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நாளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய் விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான்! இனி ராதா கரை சேருவது எப்படி முடியும்?
“முடியுமா? முடியாதா?”
“நான் என்ன பதில் கூறுவேன்”
“உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு ஊரார்....”
“ஊரார்! பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்டதாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவைகள் ஊரார் ஊரார் என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன்