உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

29

ஆண்டுகள் ஆயினவே யொழிய அவள் பருவத்திலே மூன்று அல்ல; பத்து ஆண்டுகள் குறைந்தவள் போலவே காணப்பட்டாள்.

கடலூரில் இருந்ததைவிட அதிக அலங்காரம்! குலுக்கு நடையிலே விசேஷ அபிவிருத்தி. கொடிபோல வளைந்து நிற்பதிலே ஒரு புது முறை கற்றுக் கொண்டிருந்தாள் கோமளம். மோட்டார் கதவின் மீது சாய்ந்தபடி நின்றாள். அந்த குச்சு நாய், அவளுடைய தொடை மீது தாவிப் பாய்ந்தது. ‘சீச்சி, சோமு ! கீழே படு. உம்..ஜாக்ரதை’ என்று கொஞ்சினாள் கோமளம். குச்சுநாய் மேலும் ஒரு குதி குதித்து அவள் முகத்தைத் தொட்டது.

‘சோமு! கண்ணான சோமு!’ என்று மறுபடியும் கொஞ்சி அதனை முத்தமிட்டாள் கோமளம்.

அதே நேரத்தில், லிங்கம் அவள் எதிரில் வந்து நின்றான்!

“ஒரு முத்தம் என்னைக் கெடுத்தது போல, சோமையும் கெடுத்துவிடப் போகிறது” என்று கூறினான் சிரித்துக்கொண்டே.

கோமளத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது போலாகிவிட்டது. நாயைக் கீழே போட்டுவிட்டு, மிரள மிரள லிங்கத்தைப் பார்த்தாள்.

“யார்...! லிங்கமா... நீயா..?” என்று கேட்டாள்.

“நானேதான் தேவி! உன் லிங்கந்தான். உன் அழகால் மதிமோசம் போனவனே”" என்று புன்சிரிப்புடன் லிங்கம் கூறினான்.

அவன் மிரட்டி இருந்தால், கோபித்துக் கொண்டிருந்தால், அடிக்க வந்திருந்தால்கூட கோமளம் பயந்திருக்கமாட்டாள். ஆனால் அவனது புன்சிரிப்பு அவளுடைய மனதிலே ஈட்டி போலப் பாய்ந்தது. துளியும் கடுகடுக்காது, மிக சாவதானமாக அவன் பேசிய பேச்சு அவளுக்குப் பெரும் பயத்தை உண்டாக்கிவிட்டது. ‘தன்னால் சிறைக்கு அனுப்பப்பட்ட’-