உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

31

“அழாதே தேவி! மாலை எவ்வளவோ கஷ்டப்பட்டு முகத்தை நீ செய்து கொண்ட அலங்காரம் கெட்டுவிடும். உன் முக அலங்காரத்தை நம்பி, இங்கு எத்தனையோ பேர் வருவார்கள். அவர்கள் நல்ல காட்சியைப் பார்ப்பதைக் கெடுத்துவிடாதே. கண்களைத் துடைக்கட்டுமா?” என்று கிட்டே நெருங்கப்போகும் சமயம், “ஹலோ கோமளாதேவி” என்ற குரல் கேட்டது. கண்களை அவசர அவசரமாகத் துடைத்தபடியே, கோமளம் திரும்பினாள். லிங்கமும் பார்த்தான்! ஆங்கில உடையுடன் வாயில் சிகரெட்டுடன், முகத்தில் புன்னகையுடன், 25 வயதுள்ள சீமான் வீட்டு வாலிபன் நிற்கக் கண்டான்.

“ஏதாவது இரகசியமா? நான் கெடுத்துவிட்டேனா?” என்றான் வாலிபன் கோமளத்தை நோக்கி. எப்படியோ புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கோமளம், “ஒன்றுமில்லை பாஸ்கர், இதோ இவர் என் நண்பர், மிஸ்டர் லிங்கம்” என்று வந்தவனுக்கு லிங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தாள். “இவர், சிங்காரச் சோலை ஜெமீன்தார் பாஸ்கர்; எனக்கு நண்பர்” என்று லிங்கத்திடம் கூறினாள் கோமளம்.

“ரொம்ப சந்தோஷம்” என்றான் லிங்கம். அந்தச்சொல், கோமளத்தின் இருதயத்தைப் பிளந்தது. பாஸ்கரின் முகத்தை மாற்றிவிட்டது. சிறிது நேரம் மூவரும் மௌனமாக நின்றனர். திடீரென,லிங்கம் உரக்கச் சிரித்தான். இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“மிஸ்டர் பாஸ்கர்! நாளை மாலை பார்க்கிறேன். குமாரி கோமளம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்குத்தான் தெரியுமே நான் ‘பழிக்குப்பழி கொட்டி’ என்ற நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று. திடீரென ஒரு கருத்து வந்தது. உடனே போய் அதை எழுத வேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களை விட்டுப் பிரிந்து, காரில் ஏறிக் கொண்டான். மோட்டாரும் அவன் தங்கியிருந்த விடுதியில் போய்ச் சேர்ந்தது.