உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கோமளத்தின்

ஒரு வாரம் வரையில், லிங்கம், பழைய பத்திரிகைகளைப் படிப்பதும், ஏதேதோ குறிப்பு புத்தகத்தில் எழுதிக்கொள்வதுமாக இருந்தான். யாராரோ அவனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு சரி! இனி பழிதீர்க்கும் படலம் நம்பர் 1 ஆரம்பமாக வேண்டியதுதான் என்று எண்ணினான்.

அன்றிரவு 10 மணிக்கு மேல் ஒரு முரட்டு மனிதன், லிங்கத்தைத் தேடிக் கொண்டு வந்தான். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 100 ரூபாய் பெற்றுக்கொண்டு அவன் போய்விட்டான்.

கடலூரை விட்டு சென்னைக்கு வந்த கோமளம், தனது கணவன் வைத்துவிட்டுப் போன சொத்தை முதலாக வைத்துக்கொண்டு ஆடம்பர அலங்கார வாழ்வு வாழ்வதையும் தனது தளுக்கால் பல பெரிய இடத்து மைனர்களை, ஜெமின்தாரர்களை மயக்கிப் பணம் பறித்து பெரும் செல்வம் தேடிக்கொண்டதோடு, ‘பெரிய மனிதர்களின்’ பழக்கத்தால் சமுதாயத்திலே மிக மதிக்கப்பட வேண்டியவர்களிலே ஒருத்தியாகக் கருதப்பட்டு, பத்திரிகைக்காரர்களால் புகழப்பட்டு, அரசியல் தலைவர்கள், பாங்கிக்காரர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோருடன் சரிசமமான அந்தஸ்துடன் பழகத்தொடங்கிய சாதாரண கோமளம், குமாரி கோமளா தேவி எனக்கொண்டாடப்பட்டு சமூகத்தின் மணியாக ஜொலிக்கலானாள் என்பதைத்தான், லிங்கம் அந்த ஒரு வார காலத்தில் பல ஆதாரங்களைக் கொண்டு கண்டு பிடித்தான். பல் ஒற்றர்களை ஏற்படுத்தி அவளுடைய மூன்று ஆண்டு அலுவலர்களையும் திரட்டி குறித்து வைத்துக் கொண்டான். பழைய பத்திரிகைகள் மூலமாக அவள் எவ்வளவு மதிப்புக்குரியவளாகக் கருதப்பட்டாள் என்பதும் தெரியவந்தது.

வாரந்தவறாது அவளது படம்! எந்த விருந்திலும் அவளுக்கு இடம்! எந்த அரசியல் கூட்டத்திலும் அவளுக்குச்செல்வாக்கு.