உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

33

குமாரி கோமளா தேவிதான் சென்னைச் சீமாட்டிகள் சங்கத்தின் தலைவி, கலாபிமான மண்டலியின் காரியதரிசி கீழ்த்திசைக் கலைக் கல்லூரியின் கௌரவ ஆசிரியை, 'விழி மாதே' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியை. ஆம்! அவள் இல்லாத இடமே இல்லை. அவளைக் கொண்டாடாத பேர்வழியில்லை.

பரந்தாமனின் கள்ளக் காதலி, லிங்கத்தை சிறைக்கு அனுப்பிய காதகி, சென்னையின் சீமான்கள் – சீமாட்டிகள் உலகிலே ஜொலிக்கிறாள்.

லிங்கம், அவளுடைய உண்மை உருவை வெளிப்படுத்துவதென்பதே அசாத்தியம். யார் நம்புவார்கள். சொன்னால் இவன் ஒரு பித்தன் என்று கூறிவிடுவார்கள். அவ்வளவு உயர்ந்த இடத்தில் தங்கி நின்றாள், உருவத்தால் பெண்ணாகவும், உணர்ச்சியால் பேயாகவும் வாழ்ந்து வந்த கோமளம்.

அவளுடைய செல்வமும் செல்வாக்கும் அழிக்கப்பட்டாலொழிய, கோமளத்தை, என்னால் பழிக்குப்பழி வாங்க முடியாது. எனவே எனது முதல் வேலை, கோமளத்தின் பணக்கொட்டத்தை அடக்குவதுதான்.

ஆம்! முள்ளை முள் கொண்டேதான் எடுக்க முடியும். பணத்தை பணங் கொண்டே அடக்க முடியும். பார்க்கிறேன் ஒருகை. அவளைப் பராரியாக்கினால்தான் அவள் ஒரு பாதகி என்பது விளங்கும். இல்லையேல் நான்தான் பித்தனெனப் பேசப்படுவேன். எனவே பொறு மனமே பொறு என்று எண்ணி, ஒரு முடிவுக்கு வந்தான், வஞ்சந் தீர்த்துக்கொள்ள வேண்டுமென சென்னைக்கு வந்த லிங்கம்.

“எனக்கும் அவளுக்கும் வயது எவ்வளவோ வித்தியாசந்தான்! என்னைவிடக் குறைந்தது 10 ஆண்டுகளாவது அவள் பெரியவளாகத்தான் இருப்பாள். என்றாலும் எனக்கென்னவோ அவள் மீது ஆசை அவ்வளவு இருக்கிறது.”