பக்கம்:கோயில் மணி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

133

ரோஜா, செவ்வந்தி எல்லாம் வைத்து எருவிட்டுப் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் பூசைக்கும் வேண்டிய பூக்களை ஏராளமாகக் கொடுத்துப் பாக்கியுள்ளதை நாங்கள் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். அதனால் எங்கள் குடும்பம் பிழைக்கும். உங்களுக்கும் விற்கிறதில் ஒரு பங்கு கொடுக்கலாம் என்று அவர் சொல்கிறார்.”

யோசனை மிகவும் நன்றாக இருந்தது. "போடி, பைத்தியக்காரி எனக்குப் பங்கு வேண்டாம். தோட்டமும் நீங்களும் நன்றாக இருந்தால் போதும். எருவுக்குப் பணம் தருகிறேன்.”

மேலே புதிய ஏற்பாடு செயலுக்கு வந்தது. செங்கமலமும் உழைத்தாள், நாராயணனும் உழைத்தான்.

இப்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் வீட்டுக்கு வந்து பாருங்கள். எங்கே பார்த்தாலும் மலர்கள்; நாராயணன் உழைப்பின் விளைவு அது. ரோஜாப்பூவைப் பார்ப்பேனா என்று ஏங்கின நான் தினந்தோறும் முருகனுக்கு ரோஜாப்பூ மாலை சாத்து கிறேன்.

புதிய ஒப்பந்தத்தின்படி வேலை தொடங்கிய பிறகு வாங்கின எருவுக்குக் கணக்கு வைத்துக்கொண்டு, “இந்தப் பணத்தையாவது நீங்கள் வாங்கிக்கொள்ளத் தான் வேண்டும்” என்று நாராயணன் மன்றாடுகிறான்.

எங்கள் வீட்டுத் தோட்டம் மாத்திரமா அழகு பெற்று விளங்குகிறது? செங்கமலம் புதிய பொலிவுடன் விளங்குகிறாள். நாராயணன் பழைய பிச்சைக்கார வேஷத்தோடா இருக்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/137&oldid=1384209" இலிருந்து மீள்விக்கப்பட்டது