பக்கம்:கோயில் மணி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

135

“என்னிடம் சொல்லவில்லையே அம்மா!” என்றாள் சமையற்காரி.

“யாரிடந்தான் சொல்கிறார்? அவருக்கு எத்தனையோ சிநேகிதர்கள். சரி, அவர் வந்தால் எனக்காகக் காத்திருக்க வேண்டாம், ராத்திரி நேரம் கழித்தே வருவேன் என்று சொல்லிவிடு” என்று படபடவென்று வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினாள். சாப்பிட்டுவிட்டு அவள் காரில் ஏறிப்புறப்பட்ட பிறகு புயல் ஓய்ந்து அமைதி உண்டானது போல இருந்தது.

ஸ்ரீமதி நளினி நாராயணன் பொதுத் தொண்டில் ஈடுபட்ட நாகரிக நங்கையரில் ஒருத்தி. அவள் பிறந்தகத்துச் செல்வி. புக்ககமும் மோசம் இல்லை. அழகான பங்களா, கார், மற்ற வசதிகள், ஒரே குழந்தை இப்போதைக்கு நாராயணன் ஒரு கம்பெனியில் மானேஜர் நளினி எத்தனையோ சங்கங்களில் வெவ்வேறு உத்தியோகம் வகித்து வந்தாள். எல்லாம் கெளரவ கைங்கரியங்கள். அன்னைமார் சங்கத்தில் அவள் காரியதரிசி. தோழியர் சபையில் அவள் தலைவி. மகளிர் முன்னேற்ற நிலையத்தில் அவள் புரவலர். குழந்தைப் பாதுகாப்பு மன்றத்தில் அவள் துணைத் தலைவி—இத்யாதி. இருபத்தைந்து வயசில் இத்தனை பொறுப்பை வகிப்பதென்றால் எவ்வளவு சாமர்த்தியம் இருக்கவேண்டும்! எந்தக் காரியத்திலும் நான் என்று முன்வந்து நிற்கும் துணிவுடையவள் அவள்.

வீட்டில் சமையற்காரி, குழந்தையைக் கவனிக்க ஆயா, வேலைக்காரன், தோட்டக்காரன், வேறு வேலைக்காரிகள் ஆகிய சிப்பந்திகளுக்குக் குறைவே இல்லை. அவளுடன் ஹைஸ்கூலில் படித்த தமயந்தி இரண்டு தெரு விட்டு ஒரு வீட்டில் இருக்கிறாள். அவளுடைய கணவர் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/141&oldid=1384217" இலிருந்து மீள்விக்கப்பட்டது