பக்கம்:கோயில் மணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

31

“அது எதற்கு ஆபாச விலங்கு? நல்ல பசு மாட்டுப் பால் மணமாகவும் இருக்கும்; உடம்புக்கும் நல்லது.”

“எங்கள் வீட்டில் கறக்க யாருக்கும் தெரியாதே”

“ஓர் ஆளைப் போட்டுக் கொள்ளுங்கள். இருபது, இருபத்தைந்து கொடுத்தால் உங்கள் வீட்டுத் தோட்ட வேலையையும் பார்ப்பான்.”

எனக்கு அவர் செய்த உபதேசம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் எல்லாம் சொன்னேன். “நாம் இப்போது மாதம் இருபது ரூபாய் தோட்டக்காரனுக்குத் தருகிறோம். இன்னும் ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒருவனைப் பால் கறந்து கொடுத்துத் தோட்ட வேலையையும் செய்யச் சொல்லலாம். வீட்டுக்குப் பின்னே ஒரு சிறு கொட்டகை போட்டுக் கொள்ளலாம். நாள் தோறும் பசு மாட்டின் முகத்தில், விழித்தாலும் புண்ணியம் உண்டு” என்று என் திட்டத்தையும் சொன்னேன். அவள் ஒப்புக் கொண்டாள்.

என் நண்பர் சொன்ன ஒருவருடைய உதவியால் நானூறு ரூபாய்க்கு ஒரு மாடு வாங்கினேன். முந்நூறு ரூபாய் செலவு செய்து வீட்டின் பின் புறத்தில் ஒரு மூலையில் ஒரு கொட்டகை கட்டினேன். எங்கள் வீட்டுத் தோட்டக்காரனே மாட்டைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். அவனுக்கே ஐந்து ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தேன்.

முதல் நாள் பாலைக் காபி போட்டு உண்டபோது நாங்கள் அமிர்தம் உண்ட தேவர்களே ஆகிவிட்டோம். “இனிமேல் நம் வீட்டுக்கு வாங்கும் சர்க்கரையில் இரண்டு வீசை குறைத்து விடுங்கள்” என்றாள் எள் மனைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/37&oldid=1382795" இலிருந்து மீள்விக்கப்பட்டது