பக்கம்:கோயில் மணி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

61

பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்தார். தெற்குப் பக்கம் திறந்த வெளி. அங்கே போகிறவர்கள் எட்டி மரத்தில் இலையைப் பறிக்கலாம். சின்னப்பன் அவருக்குத் தெரியாத ஆள் அல்ல.

காலைப் பத்திரிகையில் கண்ணைப் பதித்திருந்தார். சுவாரசியமான செய்தி ஒன்றில் ஆழ்ந்து போனார். அப்போது சலசல சத்தம் கேட்டது. ஆம், திருடன் வந்து விட்டான். சின்னப்பன் வேப்பங் கொத்து ஒன்றைக் கையிலே வைத்துக் கொண்டிருந்தான்.

முத்துசாமி, “அட திருட்டுப் பயலே!” என்று சொல்லி எழுந்து சன்னலோரமாகச் சென்று எட்டிப் பார்த்தார்; “ஏண்டா இதை ஒடிக்கிறாய், கழுதை” என்று கூவினார்.

“வேப்பிலை ஐயா!” என்று அவன் கெஞ்சுவது. போலப் பேசினான்.

“தெரிகிறது. வேப்பிலை தான். ஆனால் அது உங்கள் வீட்டுச் சொத்தோ? குழந்தை கையை ஒடிக்கிற மாதிரி மளுக்கென்று ஒடிக்கிறாயே! உனக்குப் பல்குச்சிக் காகத்தான் நான் வளர்க்கிறேனோ?” என்று அவர் இரைந்தார்.

“என் மகளுக்கு மாரியாத்தாள் பூட்டியிருக்கிறாள். அதற்காக...”

“சரிதான், போ போ. ஒடித்தது போதாதென்று பொய் வேறு சொல்கிறாயா? இனிமேல் கை வைத்தாய், அந்தக் கையை வெட்டிப் போட்டு விடுவேன்.” முத்து சாமிக்கு உடம்பு படபடத்தது.

அவன் வேப்பிலக் கொத்தை அங்கேயே, போட்டு, விட்டுப் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/67&oldid=1383920" இலிருந்து மீள்விக்கப்பட்டது