பக்கம்:கோவூர் கிழார்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மதிப்பு மிகுதி ஆயிற்று. ‘நாம் சோழர் குலத்திலே பிறந்ததனால் பெரிய புகழ் பெற்றோம். மன்னரைக் காட்டிலும் புலவர்களைத்தான் சான்றோர்கள் சிறந்தோராக மதிப்பார்கள். நாமும் புலவர் வரிசையில் ஒருவர் ஆகவேண்டும்’ என்ற விருப்பம் சோழனுக்கு உண்டாயிற்று.

செந்தமிழ்ப் பெரும் புலவராகிய சாத்தனார் அருகில் இருக்கும்போது நலங்கிள்ளியின் விருப்பம் நிறைவேறுவது அருமையான செயலா? அம் மன்னனும் இனிய கவிதை இயற்றும் வன்மை உடையவனானான். தானும் புலமை பெற்றதனால் புலவர்களுடைய தரத்தை உணரும் ஆற்றல் அவனுக்கு அதிகமாயிற்று. அவனிடம் இருந்த புலமைத் திறம் அவனிடம் பொறாமையை உண்டாக்காமல் புலமைக்கு மதிப்பளிக்கும் இயல்பையே வளர்த்தது. அதனால் தண்டமிழ்ப் புலவர் பலர் அவனிடம் வந்து பாடினர்; பாடிப் பரிசில் பெற்றுச் சென்றனர். அவர்கள் வாயிலாக நலங்கிள்ளியின் புகழ் சோழ நாடு முழுவதும் பரவியது. அது மாத்திரமா? புலவர்கள் எந்த நாட்டில் பிறந்தாலும் தமிழ் வழங்கும் இடம் எங்கும் போய்வரும் உரிமை படைத்தவர்கள். ஆதலால், பாண்டி நாடு, சேர நாடு என்ற மண்டலங்களுக்குப் போகும்போது அங்கும் நலங்கிள்ளியின் புகழைப் பரப்பினர். அவன் புலவர் பாடும் புகழுடையவன் ஆனான். அவனிடம் வந்த புலவர்களில் கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், மதுரைக் குமரனார் என்பவர் பாடிய பாடல்கள் இப்போதும் நமக்குக் கிடைக்கின்றன.