பக்கம்:கோவூர் கிழார்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அவன் இருக்கும் இடத்தை நாசமாக்கி, அழித்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார்கள். அவன் ஏதாவது குறும்பு செய்யட்டும். நான் சென்று மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட அதன் முளையைப் போல அழித்துவிடுகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் நான் தீய ஒழுக்க முடையவன் என்ற இழிநிலையைப் பெறுவேனாக!” என்று நலங்கிள்ளி தன் சிற்றத்தைத் தன் பேச்சிலே காட்டினான்; வஞ்சினங் கூறினான்.

அவன் பேசும் மட்டும் முதுகண்ணன் சாத்தனார் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அரசர்களுக்கு வெகுளி உண்டாகும்போது இடையிலே தடுத்துப் பேசினால் பேசுவோருக்கு அபாயம் நேரும். எந்த மனிதனும் கோபத்தில் யார் பேச்சையும் கேட்பது அரிது. அப்படி இருக்க, மன்னர் குலத்திற் பிறந்த நலங்கிள்ளியை இடையிலே பேசித் தடுப்பதென்பது எளிதா? ஆதலால் முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள்ளியின் வஞ்சினத்தைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாரே ஒழிய இடையிலே ஒன்றும் பேசவில்லை.

அரசன் ஒருவாறு பேசி முடித்தான். முதுகண்ணன் சாத்தனார் கூடியவரையில் போர் நிகழாமல் செய்ய வேண்டும் என்னும் கொள்கையுடையவர். அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அரசனுக்குப் படபடப்பு அடங்கிக்கொண்டு வந்தது. மெல்ல முதுகண்ணன் சாத்தனாரைப் பார்த்தான்; “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.