20
நாட்டின்மேல் படையெடுத்து வருவதற்கு உரியவற்றைச் செய்வதாக அறிந்து வந்து கூறினர். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்பதை எண்ணிய நலங்கிள்ளி பாண்டியனுடைய செருக்கை அடக்கிவிடுவது என்று உறுதி பூண்டான்.
முதுகண்ணன் சாத்தனார் பூதவுடம்பை நீத்துப் புகழுடம்பை அடைந்துவிட்டார். இயன்ற வரையில் போர் செய்யாமல் வாழ வேண்டுமென்று அரசனுக்கு வற்புறுத்தியவர் அவர். ஆயினும் படை வலியை உடைய அரசன் பகையை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி யெறிய வேண்டும். அப்பொதெல்லாம் புறக் கணித்து விட்டால் பகைஞன் வலிமை மிகுதியாகிப் பின்னால் அவனை அடக்குதல் அரிதாகி விடும். இதனைச் சிந்தித்த மன்னன், பாண்டி நாட்டின்மேல் படையெடுக்கத் துணிந்தான். அமைச்சர்களுடன் கலந்து ஆராய்ந்தான்.
முதுகண்ணன் சாத்தனார் இல்லாமையால் நலங்கிள்ளியின் அவைக்களம் பொலிவு இழந்திருந்தது. அவரைப் போலப் பெரும் புகழைப் படைத்த புலவர்பிரான் ஒருவரை அவைக்களத் தலைமைப் புலவராக அமைக்க வேண்டும் என்ற விருப்பம் அரசனுக்கு உண்டாயிற்று. அரசவைக்குப் பல புலவர்கள் வந்தார்கள். அவர்களுக்குள் புலவர்கள் போற்றும் பெரும் புலவராகக் கோவூர் கிழார் விளங்கினர். முதுகண்ணன் சாத்தனாருக்கு அப் புலவரிடம்