பக்கம்:கோவூர் கிழார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சோழன் நலங்கிள்ளியின் அவைக்களத்துக்கு அணியாகக் கோவூர் கிழார் விளங்கியமையால் அந்த மன்னனுடைய புகழ் எங்கும் பரவியது. பல புலவர்கள் அடிக்கடி வந்து அவனைப் பாடினார்கள். கோவூர் கிழார் வழங்கிய கவிச் செல்வத்தைத் தமிழ் நாடு பெற்றது.


9
உயிர் மீண்ட குழந்தைகள்

சோழன் நலங்கிள்ளி புகழுடம்பு பெற்றான். அவனுடைய பிரிவாற் புலவர்கள் மிக வருந்தினார்கள். கோவூர் கிழாருக்கு உண்டான துயரத்துக்கு எல்லையே இல்லை. ‘இனி உறையூரில் இருப்பது எதற்காக?’ என்ற நினைவினால் அவர் கோவூருக்கே சென்று தங்கலானார்.

நலங்கிள்ளியின் பிரிவினால் அடைந்த துயரம் கோவூர் கிழாருக்கு எளிதில் மாறவில்லை. பிறகு ஆட்சியை மேற்கொண்ட கிள்ளிவளவன் அவரைக் காணவேண்டும், தன் அவைக்களப் புலவராக வைத்துப் பாராட்டிப் போற்றவேண்டும் என்று விரும்பினான். அடிக்கடி உறையூருக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினான். கோவூர்கிழார் சிலமுறை உறையூர் சென்றார். அரசன் அவரைச் சிறப்பாக உபசரித்துப் பாராட்டி உயர்ந்த பரிசில்களை உதவினான். அவற்றைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் தம் ஊருக்கே வந்துவிட்டார் புலவர்பிரான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/75&oldid=1111110" இலிருந்து மீள்விக்கப்பட்டது