பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிராமணன் என்பவன் யார்?



வேத புத்தகங்களை வாசித்தவன் பிராமணனா? குருமூலம் தீஸைப் பெற்றவன் பிராமணனா? புராணேதிகாசங்களைப் படிக்கக் கேட்டவன் பிராமணனா? தெய்வ பக்தி மிகுந்து பைத்தியக்காரனைப் போன்றவன் பிராமணனா? பூஜை, ஆராதனை, அர்ச்சனை முதலியது செய்து பழகியவன் பிராமணனா? துறந்து அக்கினியை அடைக்காத்துக் கொண்டிருப்பவன் பிராமணனா? உலகம் மருவ பொய் உபதேசம் செய்து ஜீவிப்பவன் பிராமணனா? சிறிய நூல் போர்வைத் தெரிய உடம்பில் துணி அணியாதவன் பிராமணனா? பிரம்மாவை இகழ அவர் முகத்தில் பிறந்தேன் என்பவன் பிராமணனா? சுவாமியை எங்கள் பரம்பரையோர் வரப் பெற்றார்கள் என்பவன் பிராமணனா? ஓரிடத்தில் முதலில் பிறந்தவன் என்றும், மற்றோரிடத்தில் இரண்டாம் பிறப்பாளன் என்றுஞ் சொல்பவன் பிராமணனா? கோழி வயிற்றிலிருந்து முட்டையும், அதே முட்டையிலிருந்து கோழிக்குஞ்சும் பிறப்பது போல் பிறக்கிறேன் என்பவன் பிராமணனா? கருப்பு (இந்தியா) மனிதர்களுக்கு நானே வேதம் போதிக்கிறவன் என்று பிதற்றுகிறவன் பிராமணனா? ஜாதிகளுக்கு ஆதியானவன் பிராமணனா? இந்தியர்களை அடக்கி அடிமைப்படுத்தியவன் பிராமணனா? வேத புளுகுகளைப் படிக்கக் கேட்ட சூத்திரனுக்கு, காய்ச்சிய ஈயத்தை காதில் ஊற்ற அரசர்களுக்குக் கற்பித்தவன் பிராமணனா? க்ஷத்திரிய வைசியர்களைக் கையகப்படுத்திக் கொண்டு, பூமி ஆள இச்சிப்பவன் பிராமணனா ? நீதிமன்றத்தில் வக்கீல் வேலைப் பார்ப்பவன் பிராமணனா? தானே கடவுள், அல்லது தன்னைப்போலவே கடவுள் வருவார் என்பவன் பிராமணனா? செத்தவர்கள் பெயரில் அரிசி பருப்பு வாங்கி ஜீவிப்பவன் பிராமணனா? மூட மத சடங்காசாரங்களில் மூழ்கியவன் பிராமணனா? இல்லை, இல்லை, இல்லை. சர்வ பற்றுக்களுமற்று சமதர்மத்தில் நின்று உண்மையாக உலகத்தில் போதிப்பவன் எவனோ, அவனே பிராமணன், அவனே அறிவடைந்தவன். அவனே சத்தியவந்தன்.

நியாய வாசகன்.