பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

23



மண்டலமிட்ட குண்டல நாடி யறிந்தோனென்று மக்களறிந்து கொள்ளுமாறு மதாணி பூணூல் மார்பிலணையுமோர் அடையாளமிட்டுள்ளதைக் கவிகளால் தெரிந்து கொள்ளலாம். எவ்வித அடையாளமிட்டிருந்தாலும் அறிவடைந்தவன் என்ற பொருள்தானதிலிருக்கின்றது. இவர்களே ஞானசாதகர்களாவார்கள்.

சூடாமணி நிகண்டு தொகுதி 12 செய்.139

காப்புக்கு முன்னெடுக்குங்
கடவுடான் மாலேயாகும்
பூப்புனை மலரின் செல்வி
புனைபவ னாதலானும்
காப்பவனாதலானுங்
கதிர்முடி கடகத் தோளில்
வாய்ப்பதா மதாணி பூணூல்
வரிசையிற் புனைதலானும்

மணிமேகலை காதை 17 வரி 27

புரிநூன் மார்பிற் றிரிபுற வார்சடை
மரவுரி யாடையன் விருட்சிக னென்போன்.

இத்தகையப் பூணுநூலுக் காதாரமாகும் குண்டலியென்றும், பிரம்ம ரந்திரமென்றும் வழங்கும் நாடியின் மகத்துவத்தை அடியிற் குறித்துள்ள பாடலாற் காணலாம்.

சிவவாக்கியர்

உருதரித்த நாடிதன்னி லோடுகின்ற வாயுவை
கருத்தினாலிறுத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தர்களும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள்தரித்த நாதனாணை அம்மையாணை யுண்மையே.

ஞானாசிரியரா லருளப்பெற்ற உபநயனமென்னும் உதவி விழியாகும் ஞானக்கண் பெற்று புருவமத்திய சுழிமுனை நாடியையழுத்தி சதா விழித்து சருவ பாசபந்தங்களையு மொழித்து நனவினிற் சுழித்தியாகி தூங்காமல் தூங்குங்கால் தசநாடிகளின் தொழிலொடுங்கி குண்டலிநாடி நிமிர்ந்து தசதாதங்கள் தோன்றி கலங்கச் செய்யும்.