பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுதேசி மற்றும் சுயராச்சிய இயக்கங்களின் உந்து சக்தியாக இருப்பது நான்கு வகைத் திமிர்கள்தான் என அயோத்திதாஸப் பண்டிதர் குறிப்பிட்டார். சாதித்திமிர், மதத்திமிர், அறிவுத்திமிர் மற்றும் பணத்திமிர் ஆகிய நான்கு திமிர்களே சுயராச்சிய போராட்டத்தை உந்திச் செல்கின்றன என்றார் பண்டிதர். அந்நியப் பொருட்களை விடவும் சாதிப் பெருமையைப் புறப்கணிப்பதென்பதே முக்கியமானது எனக் குறிப்பிட்ட பண்டிதர். "பறைச்சேரி என்பது நீங்கள் குறிப்பிடும் தாய்நாட்டில் உள்ளதா?" என்று கேள்வி யெழுப்பினார்.

காங்கிரஸ்காரர்களின் போலித்தனங்களைச் சாடவும் பண்டிதர் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவது பற்றிக் கூக்குரலெழுப்பும் காங்கிரஸ்காரர்கள் பஞ்சமர்களைத் தாங்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்துவதுப்பற்றி வாய்திறப்பதில்லையே யெனவும் சுட்டிக்காட்டினார்.

பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்று கூறப்படுவது பெரும் பொய் என்பதை அயோத்திதாஸப் பண்டிதர் நிரூபணம் செய்தார். பார்ப்பனர்களின் அறிவு பயனற்ற, நடைமுறைக்குதவாத அறிவாகும். அது நம்முடைய விவசாயத் தொழிலுக்கோ, நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்ற துறைகளுக்கோ பயன்படாது. எனவே தான் நம் நாடு இப்படி பின்தங்கிய நிலையில் உள்ளதென அவர் கூறினார்.

சுதேசி இயக்கத்தின் மீதான அவரது விமர்சனமும் எதிர்ப்பும் கண்மூடித்தனமாக எழுந்தவையல்ல. 1892-ல் அயோத்திதாஸப் பண்டிதரும் அவர் உருவாக்கிய திராவிட மகாஜன சங்கத்தைச் சேர்ந்த மற்றும் சிலரும் பறையர்களது நலன்கள் குறித்த கோரிக்கைகளை காங்கிரசிடம் முன் வைத்தனர். அவற்றை மெட்ராஸ் மகாஜன சபையிடம் வைக்குமாறு காங்கிரஸ் கூறிவிட்டது. அப்படி மெட்ராஸ் மகாஜன சபையிடம் முன்வைத்தபோது அங்கே அது உதாசீனப்படுத்தப்பட்டது. ஆலயங்களில் வழிபடும் உரிமை பஞ்சமர்களுக்கு வேண்டுமென்ற அயோத்திதாஸரின் கோரிக்கையை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராம சர்மா என்பவர் கேலி செய்தார்.