பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சமர்களுக் கென்று மதுரை வீரன், காட்டேரி சாமி, கருப்பசாமி இருக்கும்போது சிவனையும், விஷ்ணுவையும் வழிபட அவர்கள் ஆசைப்படலாமா என்று ஏளனம் செய்தார். பஞ்சமரது குழந்தைகள் கல்வி பயிலும் உரிமைவேண்டும், புறம்போக்கு நிலங்களை பஞ்சமருக்கு உரிமையாக்கித் தரவேண்டுமென்ற பண்டிதரின் கோரிக்கைகளை அங்கு ஒருசிலரே ஆதரித்தனர். சுயராச்சியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டுமே இருக்கக் கூடாது. சமூக பொருளாதார சுபிட்சத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையில் மாற்ற்ம் உண்டானாலொழிய நாடு முன்னேற முடியாது என்று பண்டிதர் கருதினார். அணுகுமுறையிலிருந்த அடிப்படையான இந்த வேறுபாடே சுயராச்சியம் பற்றிய அவரது விமர்சனங்களுக்குக் காரணமாய் அமைந்தது.

ஆதியில் பெளத்தர்களாயிருந்த மக்கள் பறையரெனவும் தீண்டாதாரென்வும் இழிவுபடுத்தப்பட பார்ப்பனர்களின் சூழ்ச்சியே காரணமென ஆய்ந்தறிந்த அயோத்திதாளலப் பண்டிதர் பார்ப்பனர்களின் பொய்மையை அம்பலப்படுத்தினார். பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தமிழிலக்கியங்களிலும் தமக்கிருந்த புலமையினால் பார்ப்பனரின் சதிகளை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வது அவருக்கு சாத்தியமாயிற்று.

இந்தத் தொகுப்பில் பார்ப்பனியத்தை விமர்சித்து அயோத்திதாளப் பண்டிதர் எழுதிய ஐந்து நூல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. வெவ்வேறு ஆண்டுகளில் தனித்தனி நூல்களாகப் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல்களை ஒரே தொகுப்பாக வைத்து வாசிக்கும்போது இவற்றின் ஆற்றல் மேலும் அதிகரிக்கிறது. அரிச்சந்திரன் பொய்கள் நூலில் மா. அரங்கசாமி பண்டிதர் எழுதிய ஒரு பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா புத்தகசாலையார் 1950-ல் வெளியிட்ட ஐந்தாம் பதிப்பில் இந்தப் பகுதியும் இடம்பெற்றிருந்தது. பொருத்தமும், முக்கியத்துவமும் கருதி அந்தப் பகுதி அப்படியே இந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.