பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௧. கபிலர்

ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கவித் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமை யாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், 'மக்களின் உயிர் நான்', என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி பிறழா ஆட்சியின் மாட்சியாலும் புகழ் மண்டிக் கிடந்த நம் பழங் தமிழ் நாடு, அலை கடல் சூழ்ந்த உலகமக்கள் அனைவரது கவனத்தையும் ஒருங்கே கவர்ந்ததோடன்றி, அவர்களது உளமார்ந்த மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தகுதியும் பெற்றுத் திகழ்ந்தது.

அத்தகைய பெருமை மிக்க திருநாட்டில் மாநில மாந்தர் அறிவைக் கூரியதாக்கி-உணர்வை துண்ணியதாக்கி. ஒழுக்கத்தை விழுப்பமுடையதாக்கி-கலைமகள் கொழுநன் படைக்கும் வெற்றுடம்புகளே போல அழியாது என்றும் நின்று நிலவி மன்பதைக்கு ஒளி காட்டி வழிகாட்டும் மணி விளக்குகளாய்த் திகழச்செய்தவல்ல தீஞ்சுவைக் கவிதைகளைச் செய்தளித்த பாகுதமிழ்ப் புலவர் கணக்கிலடங்காப் பெருந்தொகையினர் ஆவர். அத்தகைய புலவர்