பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சங்ககாலச் சான்றோர்கள்


கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் சிறப்புப் பெற்றோருள் தனிச்சிறப்புப் படைத்தவர் கபிலர் ஆவர். புலவர் போற்றும் புலவரேறாய்த் திகழ்ந்த அவர்தம் தீஞ்சுவைப் பாட்டின் இன்பமும், 'தெய்வக் கவிதையின் திறனும், தமிழ் இலக்கியத் தொகையுள்ளேயே மிகப் பழையதும் விழுமியதுமாகிய மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டுள்' ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டினுள்ளேயே காட்சியளிக்கின்றன. ஆம்! தீந்தமிழின் சுவையை முற்றுமுணர வாய்ப்பின்றித் திகைத்திருந்த ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தும்பொருட்டு அருந்தமிழ்க் கவிஞர் உள்ளத்தினின்றும் மலையருவி போலக் கிளர்ந்தெழுந்த பாட்டமுதன்றோ அத்தீஞ்சுவைக் கவிதை? பத்துப்பாட்டுள் மட்டுமேயன்றிப் பழந்தமிழ்ச் செல்வங்களான புறநானூறு, குறுத்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற நூல்களையும் தம் அமிழ்தினுமினிய தமிழ்க் கவிதைகளால் அணி செய்யும் பேற்றினைப் பெற்ற பெரும் புலவர் அல்லரோ கபிலர் பெருமானார்?

இத்தகைய பெருமை பெற்ற புலவர் பெருந்தகையார் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்து வளங்கொழிக்கும் பாண்டி வளநாட்டில்-திருவாதவூரில் தோன்றினார். மாசு மறுவற்ற வீரத்திற்கும் மதுரத் தமிழ் மொழியின் வாழ்விற்கும் என்றென்றும் இடமாய் விளங்கும் ஏற்றம் பெற்ற பாண்டி வளநாட்டில் தோன்றிய கபிலர் பெருமான், சங்கத் தமிழைத் துங்கமுற வளர்த்த தம் வாழ்வாலும் வாக்காலும் மன்பதைக்கு என்றென்றும் வழி காட்டும் வான்பொருளாய்-தமிழ்ச் சான்றோராய் -விளக்குவதில் வியப்பொன்றுமில்லை அன்றோ?

கொடி படர்வதற்கேற்ற கொழுகொம்பை போலப் பண்டைத் தமிழகத்தில் புலவரைப் போற்றும் புரவலர் கூட்டம் பல்கி இருந்தது. வீரத்தால் நிகரற்றுத் திகழ்ந்த