பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சங்ககாலச் சான்றோர்கள்


மலையின் வற்றா அருவி வெள்ளம் போலத் தம் நெஞ்சிற் பொங்கியெழுந்த அன்புப் பெருக்கை-உணர்வு வெளிச்சத்தையெல்லாம்-நாமும் அள்ளி அள்ளிப் பருகி அமர நிலை காணத் தெள்ளமுதக் கவிதைகளில் தேக்கி வைத்துள்ளார் தீஞ்சுவைக் கவிஞராகிய கபிலர் பெருமானார்.

கபிலர் வாழ்ந்த காலம் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைக்க இன்ப வாழ்க்கை கடத்திய காலம். அதனாலன்றே பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் இயற்கை இன்பத்தின் சுவைப் பிழிவாய்க் காட்சியளிக்கின்றன சங்கச் சான்றோருள்ளும் கபிலர் பெருமானார் இயற்கையின் தலை சிறந்த அடியாராய் விளங்கிய பெருமை படைத்தவர். அவர் பாடியுள்ள அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இயற்கை அன்னை இன்ப நடம் புரிகின்றாள். மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது. மாவண்பாசியின் புகழ் பாப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது சங்கச் சான்றோர்க்கே உரிய செந்தமிழ் நடையில் இயற்கையின் இன்பவளம் கொழிக்கும் அம்மலையின் அழகையெல்லாம், கற்றவர் உளம் தழைக்க உடல் சிலிர்க்க-உயிர் இனிக்கப் பாடுகிறார் கபிலர்.

அப்பாடல்களைப் படிக்குந்தொறும் வான் பொய்ப்பினும் தான் பொய்யாது வளம் சுரக்கும் அருவிகளின் அழகும், அவ்வருவி நீரினும் இனிய சாயல் படைத்த பாசியின் அழகுத் தோற்றமும், ஆங்காங்கே வானுற வளர்ந்திருக்கும் ஆரமும் பலாவும், எங்கெங்கும்