பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர்

5


தொடிக் குறத்தியர் வெறி கமழ் சந்தனக் கட்டைகளை வெங்கழலிலிட்டு எரித்தலால் எழும் நறும்புகையும், அப் புகை பஞ்சென முகிலெனப் பரந்து சென்று பொன் போலப் பூத்த சாரல் வேங்கையின் கிளை தொறும் தவழும் காட்சியும், நாடோறும் வண்டு பண் பாடி நறுவருந்த மலர்ந்திருக்கும் மாயிதழ்க் குவளையும், ' உழவர் உழாதன நான்கு பயனுடைத்து', என உலகம் போற்ற முத்தனைய நெல்லுதிர்க்கும் கழைகளின் காடும், மலை பிளக்க வேர் வீழ்க்கும் வள்ளிக்கிழங்கும், கிளை தாங்காவண்ணம் பழம் ஊழ்க்கும் தீஞ்சுளைப் பலாவும், வரையெலாம் தேன் சொரிய வானுயர் கோடுதோறும் ஒளி பாய்ந்து விளங்கும் தேனடையும், அகல் விசும்பில் அள்ளித் தெளித்த அழகு நித்திலங்கள் போல ஒளிரும் வெள்ளி மீன்க ளனேய தண்ணறுஞ்சுனைகளும், அவற்றில் 'கண்போல் மலர்ந்த காமர் சுனை மலரும்' மனக்கண் முன் தோன்றி என்றும் கண்டிராத இன்ப உலகிற்கு நம்மை ஈர்த்துச் செல்லும் வல்லமை படைத்து விளங்குகின்றன.

மேலும், குறிஞ்சியின் அழகெலாம் பருகிப் பண்பட்ட கபிலர் பெருமானார், கருவி வானம் கண் திறந்து பாரியின் கருணை போல மாரி பொழியும் காலத்து, அம்மலையின் இயற்கை அழகையெல்லாம் படமாக்கிக் காட்டும் பான்மையினை மறத்தலும் எளிதோ! தேர்வண் பாரியின் தேன் சொரியும் மலையில் பரந்து கிடக்கும் பனிமலைச் சுனைகளில் பூத்துக் குலுங்கும் கிணை மகளின் இணை விழிகள் போன்ற மலர்களில் விண்ணின்று வீழும் தண்ணமுதத் துளிகள் நிறைந்து நிற்கும் கண்ணுக்கினிய கார்காலம் காண்போர் நெஞ்சை இன்பக் கடலாக்கும். அந்நாளில் அண்ணல் பாரியின் 'பேரிசை உருமொடு மாரி முற்றிய' திணிநெடுங்குன்றம் 'ஒள்ளிழைக் குறுமகள் பெருங்கவினெய்திய காட்சி போல இலங்கும்.