பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர்

7


அத்தகு பெருமைக்கு அண்ணல் பாரியின் அருமைநாடு இலக்காகியதற்கு உரிய காரணத்தையும் அவர் எடுத் துரைக்கும் திறத்தினே என்னென்று போற்றுவது !

கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
பெயல்பிழைப்(பு) அறியாப் புன்புலத் ததுவே
... ... ... ... ...
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே. (புறம். 117)

என்று மகிழ்வண் பாரியின் நாடு மாறாப் பசுமையுடன் விளங்கும் காரணத்தைக் கூறுகின்றார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (குறள், 559)

என்பதன்றோ வள்ளுவர் வாய் மொழி ? அல்லவை செய்யா வேந்தன் அரசாளும் நாட்டில், ஆன்றவிந் தடங்கிய சான்றோர் பல்கி வாழ்வர். அன்னவர் வாழும் நாட்டிலேயே அறம் திறம்பாது இருக்கும். அறம் திறம்பா நாட்டிற்கே இயற்கை அன்னையும் 'ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித் தீம்பால் சுரப்பாள்' போன்று கருணை காட்டுவள் என்பது கபிலர் பெருமானார் கருத்தாகும். சான்றோரின் பெருமையைச் சான்றோரே அறிவர்.

இவ்வாறு சான்றோர் பல்கிக் கிடந்த தண்பறம்பு நன்னாட்டின் தலைவனாய் விளங்கினான் வேள் பாரி. அவனது அருமந்த மலையின் அழகையெல்லாம் உணர்ந்து பாடிப் பண்பட்ட கபிலர்-அம்மலையாள் தலைவனது மனமாளும் பெருந்தகையார்-அவன் அருமை பெருமைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, உணர்வுக் கடலுள் ஆழ்ந்து ஆழ்ந்து, கண்ட கருத்துக்களை, எல்லாம் ஆழ்கடலின் கீழ்ச்சென்று வாரிக் கொணர்ந்த முத்துக் குவியல் போல அள்ளி வழங்கியுள்ள அருந் தமிழ்க் கவிதைகள் யாவும் தமிழ்த்தாய் பெற்ற தலை சிறந்த காணிக்கையாய் விளங்குவதில் வியப்புமுண்டோ?.