பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

நம் வாழ்விற்கு எஞ்ஞான்றும் வழி காட்ட வல்லன. வாய்த் திகழும் ஒளி விளக்கங்களே இரு வகையாகப் பாகுபடுத்தலாம்: ஒரு வகை, மாசறு காட்சி படைத்த திறவோர் யாத்த அற நூல்கள். மற்றொரு வகை, அவ்வறவோரின் நூல்கள் வழி வாழ்ந்து புகழ் கொண்ட பெருமை சான்ற சான்றோர்களின் நல்வாழ்க்கை முறைகள். திருக்குறள் போன்ற அறநூல்களை அறிவுகொண்டு ஆராய்ந்து கற்பதாலும், இதயம் கொண்டு உணர்ந்து பண்படுவதாலும் மனித வாழ்க்கை அடைய வல்ல பயன்கள் பலவாகும். அவ்வாறே அவ்வறநூல்கள் துவலும் வாழ்வின் இலக்கணங்கட்கு ஒர் இலக்கியமாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய சான்றோர்களின் பல்வகையான பயன் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகளே அறிந்து தெளிவதாலும், பல திறப்பட்ட ஒளி படைத்த உணர்ச்சி அலைகள் ஆடிப் பாடும் அவர்களின் வாழ்வுக் கடலில் படிந்து உள்ளம் குளிர்தலாலும் நம் உயிர் வாழ்க்கை காண வல்ல நன்மைகள் பலவாகும். ஆயினும், எளியதாம் பின்னைய வழியாலேயே அரியதாம் முன்னைய நெறியால் பெற வல்ல பயன்கள் பலவற்றையும் பெறல் கூடும் என்பது எண்ணிப்பார்ப்பவர் எவர்க்கும் இனிதின் விளங்கல் திண்ணம்

இக்கருத்தோடு யான் சங்க இலக்கிய உலகில் புகுந்தேன். அவ்விலக்கிய நல்லுலகில் யான் கண்டு பழகிப் பெரும்பயனடையக் காரணராயிருந்த சான்றோர் பலர் ஆவர். அவருள் தலைமை சான்ற அறுவரின் அருமை பெருமைகளையும், இலக்கிய உலகில் அவர்களோடு யான் பழகிய போது பெற்ற இன்பத்தையும் பயனையும் ஒருவாறு அனைவருக்கும் - சிறப்பாகத் தமிழ் இளைஞர்கட்கும் - எடுத்துரைக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் எழுந்த முயற்சியே சங்ககாலச் சான்றோர்கள் என்னும் இந்நூல்.