பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சங்ககாலத் தமிழ் மக்கள்

வாறு விளக்குவது, இயற்றமிழின் இயல்பாகும். உலகத்தார் செய்யும் வினைகள் யாவும் அறிவதும், செய்வதும் என இரண்டுள் அடங்கும். அவற்றுள் எண்ணி அறிவதற்குக் கருவியாவன எண் (அறிவியல்) நூல் எனவும், அறிந்து செய்வதற்குத் துணை செய்வன எழுத்து (இயல்) நூல் எனவும் பண்டைத் தமிழ் மக்களால் வழங்கப் பெற்றன. எண்ணூற் பயிற்சியால் எப்பொருளையும் தெளிய விளக்கும் உரைத் திறமும், இயல் நூற்பயிற்சியால் எத்தொழிலையும் செய்து முடிக்கும் செயற்றிறமும் பெருகுமென்பது பண்டைத் தமிழாசிரியர்களின் கருத்தாகும்.

எண்ணூல்களின் இயல்புணர்ந்து ஓதும் முறையினை ‘வாயினால் வகுத்த பக்கம்’ எனவும், இயல் நூல்களின் கருத்துணர்ந்து அரிய வினைகளைக் கையால் இயற்றும் முறையினைக் ‘கையினால் வகுத்த பக்கம்’ எனவும் தமிழ்ச் சான்றோர் வகைப்படுத்தியுள்ளனர். எண்ணூலினை அறிவியல் (Science) நூல் எனவும், இயல் நூலினைக் கலை (Arts) நூல் எனவும், இக்காலை மேலை நாட்டாசிரியர்கள் வகுத்துரைப்பதனை ஒத்த முறை நம் தமிழ் மொழியில் தொன்று தொட்டுக் காணப்பட்டு வருவது, தமிழ் மக்களின் உயர்ந்த கல்வித் திறனைப் புலப்படுத்துவதாகும்.

எண்ணும், எழுத்துமாகிய இரு வகைக் கல்வியினையும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய இரண்டு கண்களாகக் கருதிப் போற்றி வந்தார்கள். மக்கள் உடம்பிலே அமைந்த கண்கள் ஒரு காலத்தே ஓரிடத்தே அமைந்த புறப்பொருள்களையே காட்டுவன. எண்ணும், எழுத்துமாகிய இக்கண்களோ, இடத்தையும், காலத்தையும் ஊடுருவிச் சென்று, எல்லாப் பொருள்களையும் காண வல்ல சிறப்புடையனவாகும். ஆதலால், மக்கள் உயிர்க்கு இவ்விரண்டுமே சிறந்த கண்களாம்