பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

111

யுள்ளமை சங்ககாலத் தமிழ் மக்களின் வான நூற்பயிற்சியினை இனிது விளக்குவதாகும்.

வானத்தில் மின்னுகின்ற ஒளிப்பொருள்களை உற்று நோக்கி அவற்றிற்கு 'மீன்கள்' எனப் பெயரிட்டனர். இம்மீன்களை 'நாள்மீன், கோள்மீன்' என இருவகையாகப் பகுத்துரைப்பர். தம்பாலுள்ள இயற்கையொளியால் விட்டு விட்டு மின்னுவன நாள் மீன்கள் என்றும், பிறவற்றின் ஒளியைக் கொண்டு விளங்குவன கோள் மீன்கள் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு வழங்கினமை அவர்களது வான நூற் பயிற்சியை நன்கு விளக்கும்.

கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் திங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் உச்சியிலிருந்துசாய, மூலம்எழ, மிருகசீரிடம் மறைய, நட்சத்திரம் ஒன்று வடக்கும் கிழக்கும் போகாமல் இடைநடுவே எரிந்து வீழ்ந்ததென்றும்; அதனைக் கண்ட கூடலூர் கிழார் என்னும் இப்புலவர் தம் அரசனாகிய யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறைக்குத் தீங்குண்டாகுமென்று தெரிந்து உளந்திடுக்குற்றார் என்றும் ; புலவர் அஞ்சியதற்கேற்பவே அன்றைக்கு ஏழாவது நாளில் அம்மன்னன் உயிர்நீத்தான் என்றும் அவர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்றால் (229) அறிகின்றோம்.

கூடலூர்கிழார் பாடிய புறப்பாட்டிலுள்ள வானநூற் குறியீட்டுச் சொற்கள் யாவும் தனித் தமிழ்த் சொற்களாகவே அமைந்துள்ளதனை நோக்குங்கால், அவர்காலத்து வான நூலைப்பற்றிய தமிழ் நூல்கள் பல இயற்றப்பட்டிருந்தமை நன்கு புலனாம். வான நூலிற் சிறந்த பயிற்சியுடை-