பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

சங்ககாலத் தமிழ் மக்கள்

திருவள்ளுவனார் திருக்குறள் பொருட்பாலில் தெளிவாக அறிவுறுத்துகின்றார். திருச்குறளை நன்கு கற்றுணர்வோர் சங்ககாலத் தமிழகத்தில் வழங்கிய அரசியல் முறையின் செம்மையினை நன்குணர்வர். நாட்டினை ஆளும் அரசியற் தலைவன் தன்னாட்டுக்கு உண்டாகும் ஆக்கத்தையும், அதனைப் பெறுதற்குத் தடையாயுள்ள இடையூறுகளையும் புறத்தார்க்குப் புலப்படாது தன் மனத்தேயடக்கிக் கொண்டு அமைதியாக அரசியலைச் செலுத்துதற்குரியவனாவன். சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன், யானை தன் மேல் ஒருவன் எறிந்த கல்லை யாருக்கும் புலப்படாமல் தன் கன்னத்தில் அடக்கிக்கொண்டிருந்தாற்போலக், காலமும் இடமும் கருதி அடங்கியிருந்தான். அவனது அரசியல் நுட்பத்தினை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் ஒரு செய்யுளிற் புகழ்ந்து போற்றுகின்றார் :

"ஐம்பெரும்பூதத்தின் இயல்பினையும், ஞாயிறு முதலியவற்றின் இயக்கத்தினையும் நேரே சென்று பார்த்தவர்களைப் போல நாளும் இன்ன தன்மையன எனச் சொல்கின்ற பேரறிஞர்களும் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். அவர்களாலும் அறிய முடியாத வன்மையினையுடையவனாக நீ அடங்கி வாழ்கின்றாய். ஆதலால், நின்னுடைய திறத்தை எவ்வாறு புலவர்கள் விளங்கப்பாடுவார்கள்?" என அவனை அவர் போற்றும் முறை, அவ்வேந்தனது அரசியற்கல்வியின் நுட்பத்தைக் குறிப்பாக அறிவுறுத்துவதாதல் காணலாம்.

வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது பொருளாகும். 'பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்வில் யாதொரு தொடர்பும் இல்லை' எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். பொருள்கள் வருதற்குரிய வழி துறைகளை