பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சங்ககாலத் தமிழ் மக்கள்



களைச் செய்தும், பெரும்பொருள் கொடுத்தும், அவர்களிடத்துப் பணிவுடையவராய் ஒழுகி நற்பொருள்களை ஒதி உணர்ந்தனர். அக்காலத்துத் தமிழ் மக்கள் மாணவ நிலையில் மட்டுமன்றி, மணந்துகொண்ட பின்னரும், உயர்ந்த நூற்பொருள்களைக் கற்றற்கெனவே வேற்றூர்களுக்குப் பிரிந்து சென்றார்கள். இங்ஙனம் உயர்ந்த கல்வியின் பொருட்டுப் பிரியும் பிரிவு 'ஒதற்பிரிவு' என அகப் பொருள் நூல்களிற் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டிலுள்ளவர் பலரும் தாம் சாந்துணையும் அறிவு நூல்களைக் கற்றுக் கல்வியிற் கருத்துடையவராய் வாழ்ந்தமை பால், தமிழ் மொழி பல கலைத் துறைகளிலும் சிறப்புற்று வளர்வதாயிற்று.