பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சங்ககாலத் தமிழ் மக்கள்

பொருளைப் பேணாது வாழ்தல் புலவர்களின் மனவியல்பாதலின் வறுமையுறுதலும் அவர்தம் இயல்பாயிற்று. புலவர் வறுமை நிலையில் வருத்தமுற்றாலும், அவர்தம் மதி நலமுணர்ந்த மன்னர்களாலும் நாட்டு மக்களாலும் வரிசையறிந்து பரிசில் தந்து, பாராட்டப் பெற்றனர். தமது வறுமை நீங்க நிறைந்த பெரும் பொருளைப் பெற்று இன்புறுதல் வேண்டுமென்ற கருத்தால் பெருமையில்லாத மக்களை உயர்த்துக் கூறும் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதனவற்றைச் செய்தனவாகப் பொய்யாகப் பாராட்டுதலைப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அறவே வெறுத்தார்கள். "வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் ; மெய் கூறுவல்,” என்பது மருதனிளநாகனார் வாய் மொழியாகும்.

கல்வி, வீரம், ஈகை ஆகிய பெருமிதப் பண்புகளை உடைய நன்மக்களின் புகழைத் தமிழகம் எங்கணுஞ் சென்று உளமுவந்து பாராட்டிப் போற்றுதல் தமிழ்ப் புலவர்களின் திறனாய் அமைந்தது. "வண்மையில்லாத வேந்தர் காணக் கெடாது பரவிய நின் புகழைத் தமிழ் நாடு முழுவதும் கேட்பப் புலவர் பலரும் தமது பொய்யாத செவ்விய நாவினுல் வாழ்த்திப் பாடுவர்,” எனக் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்னும் புலவர் பிட்டங் கொற்றன் என்னும் வள்ளலை நோக்கிக் கூறுதலால் இவ்வுண்மை புலனாம்.

அறிவுடையார் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையே மன்னர் பலரும் தாம் பெறுதற்குரிய நற் பேறாகக் கருதினர். சோழன் கிள்ளி வளவன் என்பான் குளமுற்றத்துத் துஞ்சினமையறிந்து செயலற்று வருந்திய ஐயூர் முடவனார் என்னும் புலவர், "நிலவரை உருட்டிய நீள்நெடுந்தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை