பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சங்ககாலத் தமிழ் மக்கள்

சான்றோர்க்குச் சொல்லிவிட்டு வடக்கிருந்தான், சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கேள்வி வாயிலாக அறிந்து அன்பு செய்ததல்லது ஒரு முறையேனும் நேரிற்கண்டு பழகியவரல்லர். பல யாண்டுகள் உள மொத்துப் பழகிய பெருங்கேண்மையராயினும், நெடுங் துரத்திலிருந்து நண்பர் நினைத்த மாத்திரத்தே வந்து சேர்தல் என்பது இயலாத செயலாம் என அங்குள்ள சான்றோர் ஐயுற்றிருக்கும் நிலையில் அவர்களெல்லாரும் வியந்து உள்ளம் உருகும்படி பிசிராங்தையார் வந்து சேர்ந்தார் ; கோப்பெருஞ்சோழன் பக்கத்தில் தமக்கென அமைக்கப் பட்ட இடத்தில் மன்னனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு. இவ்வாறே பொத்தியார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருந்து உயிர் நீத்தனர். பொய்யா நாவிற் புலவர் பெருமானாகிய கபிலர், தம்மையாதரித்த உயிர்த்தோழனாகிய பாரிவேள்,வேந்தரது வஞ்சனையால் உயிரிழந்தமைக்கு ஆற்றாது, அவன் மகளிர் இருவரையும் தம் மகளிராகக் கருதி, அவர்களைப் பார்ப்பார் இல்லில் வளரப்பணித்துத் திருக்கோவலூரில் பெண்ணையாற்றின் நடுவே அமைந்த பாறையொன்றில் வடக்கிருந்து உயிர் துறந்தமை அப்பொழுது அவர் பாடிய புறப்பாடலாலும், திருக்கோவலூர்த் திருக்கோயிலிற் பொறிக்கப்பெற்ற சோழர் காலக் கல்வெட்டினாலும் நன்கு புலனாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர் தம்மையாதரித்து நண்பு செய்த அரசர் வள்ளல் முதலியவரின் துன்பக் காலத்தில் அவர்தம் பிரிவாற்றாது அன்பினால் உடனுயிர் விடும் பெருங்கேண்மையினராய் விளங்கினமை மேற்காட்டிய அருஞ்செயல்களால் நன்கு துணியப்படும்.

நாடாளும் மன்னர்கள் வெகுளியினால் மனந்திரிந்து பழியுடைய செயல்களைச் செய்யத் துணிதலும் உண்டு.