பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

சங்ககாலத் தமிழ் மக்கள்

 பொறையின் ஆட்சியினைக் குறுங்கோழியூர் கிழார் பின் வருமாறு பாராட்டுகின்றார்:

'நினது குடை நிழற்கீழ் வாழும் மக்கள் சோறு சமைக்கும் நெருப்புடனே கதிரவனின் வெயில் வெம்மையைத் தவிர, வேறு வெம்மையை (கொடுந் துன்பத்தை) அறியார்; வான வில்லையன்றிப் பகைவருடைய கொலை வில்லைப் பார்த்தறியார்; உழவுத் தொழிற்குரிய கலப்பையைத் தவிர, வேறு படைக்கலங்களைக் கண்டறியார். நின்னாட்டில் கருவுற்ற மகளிர் வேட்கையினால் விரும்பியுண்பதல்லது பகைவரால் உண்ணப்படாத மண்ணினையுடையாய் நீ' என அப்புலவர் சேரமானைப் பாராட்டுகின்றார். "மாந்தரஞ்சேரல் பாதுகாத்த நாடு அமைதியான இன்ப நுகர்ச்சியால் தேவருலகத்தையொக்கும்," என மற்றொரு பாடலால் அம்மன்னன் போற்றப்படுவதனை நோக்கினால், அவனாட்சியின் அமைதி நிலை நன்கு புலனாம்.

போரின்றி அமைதியாக வாழ்தற்குரிய சூழ் நிலையினையும், அதற்குரிய அறிவாற்றல்களையும் வருங்காலத் தமிழ் மக்கள் உண்டாக்கிக்கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தினைப் பழந்தமிழ்ப் புலவர் இடை விடாது ஆராய்ந்து அமைதி பெற முயன்றமை மேற்காட்டிய குறிப்புக்களால் நன்கு துணியப்படும்.

பழந் தமிழ்ப் புலவர்கள், ஒருவரோடொருவர் இகலின்றிக் கலந்து வாழ்ந்தார்கள் ; தாங்கள் பெற்ற பெருஞ்செல்வத்தை ஏனைய கலைஞர்களும் பெற்று மகிழ்தல் கருதி, அவர்களை வள்ளல்களிடம் வழிப்படுத்தினார்கள். இசைத் தமிழில் வல்ல பாணர்களையும், நாடகத் தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரையும், தம்மை ஆதரித்த வள்ளல்களிடம் வழிப்படுத்தி வாழ்வித்த செய்-