பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சங்ககாலத் தமிழ் மக்கள்

லிய அவையம்’ எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எட்டு வகைப் பண்புகளாலும் நிரம்பிய தகுதியுடையவர்களே இவ்வவையில் நீதி வழங்கும் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.

ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர், குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதான் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர்மன்றத்தார், அக்கொடியோனை மரத்திற் பிணித்து அவன் தலையிற் சாம்பலைக்கொட்டி அவமானப்படுத்தித் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனார் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அகம். 256) குறிப்பிடுகின்றார். இந்நிகழ்ச்சியால் ஊர்ச் சபையார்க்குத் தம்மூரில் நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ் வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாம். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர் மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர்.

இரவிற் கள்வர் முதலியவர்களால் மக்களுக்குக் தீங்கு நேராதபடி ஊர்தோறும் ஊர் காவலர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நடுவு நிலைமையும் அருட்குணமும் வினையாண்மையுமுடையவர்களையே அரசர்கள் தங்களுக்கு அமைச்சர்களாகத் தேர்ந்துகொண்டார்கள். நடுவு நிலைமையைக் கைவிட்டு நீங்கி, அருளில்லாத அமைச்சன் தான் விரும்பியதைச் சொல்ல, அது கேட்டு மன்னன் முறை பிறழ்ந்து நடப்பானானால், அவனது கொடுங்கோல் ஆட்சியின் வெம்மையினாற் குடிமக்கள் பெரிதும் வெதும்பித் துன்-