பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சங்ககாலத் தமிழ் மக்கள்

பொருளினே ஈவாயாக’ என இரந்து நிற்றல் இழி செயலாகக் கருதப்பட்டது. இரவலர் தம்மைப் பணிந்து வேண்டுதற்கு முன்னரே அவர்தம் உள்ளக்குறிப்பறிந்து வேண்டுவன கொடுத்துச் சிறப்பித்தல் செல்வர்க்குரிய உயர்ந்த செயலாகப் போற்றப்பெற்றது. இல்லையென்று இரப்பார்க்கு ஒரு பொருளையும் கொடாது அனுப்புதல் மிகவும் இழித்ததென அறிஞர் அறிவுறுத்தினர். இரப்பார்க்கு இல்லையென்றுரைக்கும் இழிநிலை தம் வாழ்க்கையில் நேராதபடி தமிழர் பொருளீட்டுதலிற் கருத்தைச் செலுத்தினர்; அருஞ்சுரமும் பெருமலையும் கடலுங் கடந்து வேற்றுமொழி வழங்கும் நாடுகளிற் சென்றும் பெரும் பொருள் தொகுத்தனர்; ‘தம் முன்னோர் தொகுத்து வைத்த பொருளைச் செலவழித்து உண்டுடுத்துச் சோம்பியிருக்கும் உள்ளமுடையார் உயிருடையர் அல்லர்’, என்பது தமிழர் கொள்கை. தம் முயற்சியால் ஈட்டப்பெற்ற பொருளைக்கொண்டே மணஞ்செய்துகொள்ளுதல் தமிழர் வழக்கமாகும். இக்கருத்தினால் திருமணத்தை முன்னிட்டுப் பொருள் தேடச் செல்லுதல், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிதல்’ எனக் குறிக்கப் பெறுகின்றது. மனைவி மக்கள் முதலியவர்களைப் பிரிந்து கணவன் பொருள் தேடச் செல்லுதலைப் ‘பொருள்வயிற்பிரிவு’ என இல்லறக் கடமைகளுள் ஒன்றாக அகப்பொருள் நூல்கள் சிறப்பித்துரைக்கின்றன.

“உலகினை ஆளும் பெருவேந்தனுக்கும் இரவும் பகலும் உறக்கமின்றி வேட்டை மேற்கொண்டு திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் உணவு நாழி அரிசியே ; உடுத்தற்குரிய ஆடைகள் இரண்டே ; ஏனைய நுகர்ச்சி முறைகள் யாவும் இவ்வாறு ஒத்தனவேயாம்