பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சங்ககாலத் தமிழ் மக்கள்

பயிலுதலும் தமிழிளேஞர்களின் பண்டைக்கால விளையாட்டுக்களாய் அமைந்தன. ஆழமான நீர்நிலையின் அருகே ஓங்கி வளர்ந்த மரத்தின்மேல் எறிநின்று, கரையிலே நின்றவர் வியப்படையும்படி அந்நீர் நிலையிலே திடீரெனக் குதித்து, அதன் அடியிலேயுள்ள மண்ணைக் கையால் அள்ளிக்காட்டி விளையாடுதல், தமிழ் இளைஞர்களின் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். தளர்ந்த நடையினராய்த் தண்டூன்றிச் செல்லும் முதுமைப் பருவத்தினராகிய புலவர் ஒருவர், கண்டார் வியக்கும்படி நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து அதன் அடியிலுள்ள மண்ணைக் கையால் எடுத்துக் காட்டிய தம் இளமைப் பருவச் செயலைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் மிகவும் சுவைபட எடுத்துக் கூறி, ‘அவ்விளமை இப்பொழுது இல்லையே!’ என இரங்குகின்றார்.

‘இளமையிற் சிறந்த வளமையில்லை’, (நற்றிணை) என்றார் ஒரு புலவர். ஒருவனது வளர்ச்சிக்குரிய பருவம் இளமையேயாதலின், அவ்விளமைப் பருவத்தை ஒருவன் நிலைபெறப் போற்றிக்கொள்வதைக் காட்டிலும் அவன் பெறுதற்குரிய செல்வம் வேறு ஒன்றுமில்லை என்பது அப்புலவர் கருத்தாகும். இளமைப் பருவத்திற்குப் பொலிவினைத் தருவது பொருட் செல்வமாகும். பொருளில்லாதவனது இளமைப் பருவம் பொலிவிழந்த நிலையினதாம். பொருளீட்டுதற்குரியார் வினைசெய்தற்கண் ஊககமுடையவராய் இருப்பர். மக்களால் பொருளென மதிக்கப்படும் உண்மையான செல்வம் உள்ளக் கிளர்ச்சியாகிய ஊக்கமுடைமையேயாகும். வினைசெய்தற்கண் தோன்றும் உள்ளக் கிளர்ச்சி ஆடவர்களுக்குச் சிறப்பாக உரித்தாகும். வினைசெய்தலில் உள்ள ஊக்கம் ஒருவன் உள்ளத்து நிலை-