பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

69



பெற்றிருக்குமானால், அவனுக்கு உணவு முதலிய வளங்கள் குறைந்தாலும், அவன் உடம்பு திண்மையும் அழகும் பெற்றத் திகழும். வினைத்திறமாகிய ஊக்கமுடையானொருவன், அற்ப உணவை உண்பானாயினும், அவனுடல் திண்மையாற் பொலிவு பெறும் என்பர். "என் தலைவன் புல்லிய உணவினையுண்டும், மலையென வளர்ந்த பெரிய தோள்களை உடையவனாய் விளங்குகின்றான்", எனத் தலைவி தன் தலைவனைப் பாராட்டுகின்றாள். ஆகவே, உடம்பின் வளர்ச்சிக்கு உணவு முதலிய புறச் செல்வங்களைவிட வினை செய்தற்கண் தோன்றும் அகமகிழ்ச்சியாகிய ஊக்கமே சிறந்த காரணமாகும் என்பது புலனாம். வினைத்திறமே ஆடவர்களுக்கு உயிராகும். 'வினையே ஆடவர்க்குயிரே' என்றார் ஒரு புலவர். உயிராற்றலாகிய இவ்வினத் திறத்தைப் பெறுதற்கேற்ற வன்மையுடையதாகத் தம்முடம்பினை வளர்த்தல் தமிழிளைஞர் கடனாயிற்று.

தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்வாழ்க்கையினை ஒரு பொருளாக மதியாது, எத்தகைய பகையினையும் எதிர்த்து நிற்குந் திண்மை பெற்றிருந்தார்கள். மெலியாரிடத்தே அவரினும் மென்மையுடையராகப் பணிந்தொழுகுதலும், வலியாரிடத்தே அவரினும் வன்மையுடையராகத் தலைநிமிர்ந்து நடத்தலும் ஆடவர்க்குரிய தலைமைப் பண்புகளாகும் எனத் தமிழ்மக்கள் எண்ணினார்கள். திண்மை இல்லாத ஆடவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை பெறுதலியலாது. தங்களேயே காப்பாற்றிக் கொள்ளுங் திறமை பெறாத இவர்கள், தங்கள் குடும்பத்தினரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளமுடியும்?

இடையூறுகளையெல்லாம் எதிர்த்து நின்று தங்கள் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஆண் மக்களுக்கே