பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடவர் நிலை

75

னுடைய உயிர் நண்பராகிய பொத்தியார் என்னும் புலவர் தம் மனைவி பிள்ளைப்பேறடையும் நிலையிலிருந்தும் தாமும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட முயன்றார். அதனை உணர்ந்த கோப்பெருஞ்சோழன் புலவரை நோக்கி, “புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா,” எனப் பணித்துப் பொத்தியாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் என்பதும், அரசன் பணியினை மேற்கொண்டு வீடு சென்ற புலவர் தம் மனைவி புதல்வனைப் பெற்று உடல் நலம் பெற்ற பின்னர்த் திரும்பிச் சென்று வடக்கிருந்து நடுகல்லாகிய கோப்பெருஞ்சோழனையடைந்து, 'இடங்தருக’ என வேண்டிப் பெற்று, உண்ணாது வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் பொத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடலால் இனிது விளங்கும். இவ்வரலாற்றைச் சிறிது ஊன்றி ஆராய்ந்தால், தம் நாட்டில் மக்கள் தொகை பெருகுதல் வேண்டும் என்பதில் தமிழ்மன்னர் பேரார்வம் கொண்டிருந்தமை நன்கு புலனாகும்.

ஆண்மையும் ஆற்றலும் உடைய புதல்வர்களைப் பெற்று வளர்த்தலைத் தாய் தன் கடமையாக எண்ணினாள். தன் புதல்வர்களுக்கு நிறைந்த கல்வியைப் பயிற்றி அவைக்கண் எல்லாரினும் முந்தியிருக்கச் செய்தலையும் அவர்களைப் போர்த்துறையில் பயிற்சி நிரம்பிய அமைதி உடைய வீரராக்கித் தன் நாட்டிற்கு உழைக்கச் செய்தலையும் தந்தை தன் கடமையாக எண்ணினான். போர்த்துறையிற்சிறந்த அவ்வீரர் பகைவரை வென்று மேம்படுதற்குரிய வேலும் வாளும் முதலிய படைக்கலங்களையும் பிறவற்றையும் செய்துகொடுத்து நாட்டின் படைத்திறனைப் பெருக்குதலையே கொல்லர் முதலிய தொழிலாளர் தம் கடமையாகக் கொண்டிருந்தனர். அவ்வீரர்களுக்கு அரசியல்