பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௩௩. எயினந்தை மகனார் இளங்கீரனார்

இளங்கீரனர் என்ற இயற்பெயருடையார் பலராவர்; அவருள் இவர் எயினந்தையாரின் மகனாதலின், எயினந்தை மகனார் இளங்கீரனார் என்றழைக்கப்பட்டுளார். இவர் தந்தையார், எயினந்தையாரும் ஒரு புலவராவர். இவர் பாடிய பாக்கள் பன்னிரண்டு. நற்றிணையில் மூன்று; நெடுந்தொகையில் ஒன்பது; இவர் பாடிய பாக்கள் எல்லாம் பாலைத்திணையில் பொருள்வயிற் பிரிவு குறித்தே வந்துள்ளன.

தன் தலைவியைப் பாராட்டும் தலைமகன் ஒருவன், அவள், ஒருவரையொருவர் இன்றியமையாமைக்கு ஏதுவாகிய காதலும், ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமைக்கு ஏதுவாகிய மடனும், மென்மைத்தன்மையும், ஒழுக்கமும், என்பையும் உருக்கும் இன்சொல்லும், பெண்களுக்கு ஒதிய அறிவு, நிறை, செறிவு முதலாம் பிற பண்புகளும் ஒருங்கே உடையாள் எனப் பாராட்டினான் எனப் பாடிப் பெண்ணினிலக்கணம் கூறியுள்ளார் புலவர்.

"அன்பும், மடனும், சாய்லும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஒராங்கு முயங்கி."

(அகம்: உஉ௫)


மனைவி, மக்கள் முதலாம் சுற்றத்தார்மாட்டுக் கொள்ளவேண்டிய அன்பும், அவரல்லாப் பிற உயிர்கள்.மாட்டும் கொள்ளவேண்டிய அருளும், பொருள் பெற்றார்க்கே உண்டாம், என்பதறிந்து ஒரு தலைவன் பொருள் தேடிவர எண்ணினான்; தன் எண்ணத்தைத் தலைவிக்கு உணர்த்தின், அன்பின் மிகுதியால், அவள் தன்னைப் பிரியவிடாள் என உணர்ந்தான்; அதனால், அவளிடம் கூறாமலே போவதற்கு ஆவன மேற்கொள்ளலாயினன்; அவன் அறிவித்திலன் ஆயினும், அவள் எவ்வாறோ அதை அறிந்துகொண்டாள்; அவன் பிரிவை எண்ணி எண்ணிக் கண்ணீர்விட்டுக் கலங்க