பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அதியன் விண்ணத்தனார்

ஈண்டு அஞ்சல் எனக் கூறித் துணைவந்த அரசன் தலைவனாவன்; மதில் அகத்தே இருக்கும் ஆற்றல் அற்ற அரசன், இல்லுறை தலைவியாவள்; உடைமதில் ஓரெயில், பெண்மைக்குரிய குணங்கள் எல்லாம் ஒழிய எஞ்சிநின்ற நாண் ஒன்றேயாம்; துணைவேந்தன் கைவிடல், இருந்து தலையளி புரியவேண்டிய தலைமகன் பிரிந்துபோதலாம்; பகையரசன், தலைவன் பிரிந்தான் எனக் கண்டு, அக்கணமே தலைமகளைப்பற்றி வருத்தும் பசலைநோயாம்.

இத்துணைப் பெரும் பொருள் தோன்றக் கூறவல்ல பேரறிவு படைத்த தோழியை நம்முன் நிறுத்திக்காட்டிய புலவரின் புலமையினைப் போற்றுவோமாக! உடைமதில் ஓரெயில் மன்னன் என்ற இவ்வுவமையால், அக்கால் அரச வாழ்வின் அலங்கோல நிலையினை, அங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டிய இவர் அறிவின் பெருமையே பெருமை!

‘வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னன் போல

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே.” (நற்: ௪௩)