பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௨ எயினந்தையார்

இவர் எயினன் என்பார் தம் தந்தையாராவர்; எயினைத் தந்தையாகவுடையவர் என்று கூறுவாரும் உளர் ஆதன் தந்தை, ஆந்தை என வருதல்போல் எயினன் தந்தை என்பதே, எயினந்தை என ஆம்; எயினன் தந்தை என்ற தொடர் எயினனின் தந்தை எனப் பொருள் தர' வல்லது. எயினனைத் தந்தையாக உடைய எனப் பொருள் தாராமை உணர்க. இவருடைய மகனார் ஒருவர். இளங் கீரனார் என்ற பெயருடையார். அவரும் ஒரு புலவராவர், எயினந்தையார் பாட்டொன்று நற்றிணைக்கண் வந்துளது. அப்பாட்டு, அழகிய ஓர் உவமையின் நிலைக்களமாய் உயர்ந்தோராம் பாராட்டப்பெறும் பண்பு வாய்ந்துளது.

தலைவன் ஒருவன், பிரிந்தறியாத் தலைமகளைப் பிரிந்து பொருள் தேடிவரப் புறப்பட விரும்பினான்; விரும்பிய அவன், அதை அவள் தோழிபால் மெல்ல உணர்த்தினான்; பிரிந்தால் தலைமகளுக்கு உண்டாம் துயர்க்கொடுமையினை உணர்ந்தவள் தோழி; அதனால், அவனைச் செல்லாவாறு செய்தல் இயலுமா என எண்ணினாள்; உடனே அவனை நோக்கி, “ஐய! பொருளீட்டுதற் பொருட்டு வெப்பம் மிக்க, கடத்தற் கரிய காட்டுவழியில் போதல் நுமக்கு மிக்க உவகை அளிப்பதாய் உளது; ஆனால், எம் தலைவிக்கோ எனின், நீயிர் பிரிந்து செல்வதைக் கேட்டவுடன், யானைப்படை பல கொண்டுள்ள பகைவேந்தன், தன் மதிற்புறத்தே வந்து முற்றுகையிட்டுள்ள காலத்தே, அஞ்சற்க எனக் கூறித் தனக்குத் துணைபுரிய வாக்களித்த வேந்தன், துணை புரியாது கைவிட்டானாக, எல்லா மதிலும் அடியோடு அழிந்து போக, உடைபட்ட ஒரே மதிலை உடைய அரசனுக்கு நேர்ந்த கேடுபோன்ற பெருங்கேடு வராநின்றது. இதை அறிந்து, இசைந்ததொன்றினைச் செய்வாயாக” என்று கூறி நின்றாள் எனப் பாடியுள்ளார்.

அ.வி.—7