பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

125

உழவுத் தொழில் ஒன்றில் மட்டும் சிறந்த நாடோ, கைத்தொழில் ஒன்றில் மட்டும் சிறந்த நாடோ, உலகில் உயர்நிலை பெறுதல் இயலாது; எந்த நாட்டில் உழவுத் தொழிலும், பிற கைத்தொழில்களும் ஒருசேரச் சிறந்து விளங்குகின்றனவோ அந்நாடே உலக நாடுகள் அனைத்தினும் உயர்நிலைபெற்று விளங்கும் என்ற உண்மையினை யுணர்ந்த நம் புலவர், “நெற்பல பொலிக” என வாழ்த்தியதோடு நில்லாமல், அந்நாடு பிற தொழில்களிலும் தலை சிறந்து, அதனாற் பெற்ற பொருள் வளத்தினையும் பெறுக என்ற எண்ணமுடையராய்ப், “பொன் பெரிது சிறக்க” என்றும் வாழ்த்தியுள்ளார்.

“ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை,” என்றும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்றும் கூறுவர் பெரியோர். ஈட்டிய பெரும் பொருளைத் தாமே தனித்துண்ண எண்ணுதல், இழிவு மட்டுமன்று; இடர்ப்பாடும் உடைத்து; அவ்வாறு உண்பதால் பொருள் நிலையில் ஏற்றத் தாழ்வான இருவேறு நிலைகள் உண்டாகி, உலகின் அமைதிகெட ஏதுவாகிறது. ஆகவே, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற விரிந்த உள்ளமுடையராய்த் தம்பால் உள்ள பொருள்களைத் தம்மனை நோக்கி வருவார்க்கு வழங்கி வாழ்தல் வேண்டும்: இதையுணர்ந்த புலவர், வருவார்க்கு வழங்குக என்று கூறுவதோடு அமைதியுறாது, வாராத இரவலரையும் வரவழைத்து வழங்குக என்ற கருத்துப்பட “வருக இரவலர்” என்றும் கூறியுள்ளார்.

மக்கள் உண்ணும் உணவு அளவால் மிகுவதினும், ஆற்றலால் மிகுந்ததரதல் வேண்டும், மக்கள் உடற்து. உரம் ஊட்டும் உணவினையே தேடி உண்ணுதல் வேண்டும்; உரம் ஊட்டும் உணவுகளுள் பாலே சிறந்தது; பால் உணவு உடையார், நாள் பல பெற்று வாழும் நல்லுடல் உற்றவராவர்; ஆகவே, நாட்டில் பால்வளம் பெருகுதல் வேண்டும்; பால் தரும் ஆனிரை முதலாயின செழித்து வளர்ந்து