பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அதியன் விண்ணத்தனார்

ஒரு நாடு, காடாக விளங்கவேண்டுமாயின், அந்நாட்டில் உயிர்ப்பன்மைகள் வாழ்தல் வேண்டும் ; உயிர்ப்பன்மைகள் இன்றேல் பாடு இல்லையாம்; தலைவனைப் பிரிந்து தணித்துறையும் தலைவியொருத்தி, தன் தனிமை நிலைக்கு வருந்துவாள். “வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத்திருந்த தனிமகன் போன்றேன்” எனக் கூறுமுகத்தான், குடிமக்கள் அற்ற ஊரைப் பாழர் எனப் பழித்துள்ளமை காண்க. நாட்டில் உயிர்ப் பன்மைகள் வாழவேண்டுமேல், அவ்வுயிர்களை வாழச்செய்வதாய உணவுப்பொரும் வேண்டுமாம்; என்னை, “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே ; உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்பவாகலின் ; அவ்வுணவுப் பொருள் குறைவின்றி நிறைந்திருத்தல் வேண்டுமாயின், அந்நாடு நீர்வளம், நிலவளம் மிக்க நாடாதல்வேண்டும்; நீர்வளம், நிலவளம் இரண்டனுள், நீர்வளமே மிகவும் வேண்டப்படுவதாம்; உலகிற்கு இன்றியமையாதது நீரே; அந்நீரைத் தருவது மழை; மழையில்லா நாட்டில் பசும்புல்லின் தலை காண்பதும் அரிதாம்; அந்நாட்டில் உழவர் தம் ஏர்த்தொழிலையும் இயற்றல் ஆற்றார்; ஆகவே, உலக வாழ்விற்கே அடிப்படையாயது மழை; அம்மழை குறைவறப் பெய்யும் நாட்டிலேயே நலங்கள் எல்லாம் நனிசிறந்து விளங்கும்; இவ்வுண்மையினை உணர்ந்தவராதலின், புலவர், “மாரி வாய்க்க வளம் நனிசிறக்க!” என் வாழ்த்தியுள்ளார்.

மழைபெய்து விட்டமையினாலேயே, வளம் சிறந்து விடும் எனக் கொள்வதற்கில்லை; விளையும் பயிர்களுக்கு உண்டாம் இடையூறு எண்ணில் அடங்கா; விட்டில், விலங்குகளாலும், புழு, பூச்சிகளாலும் அவை பாழுறும்; இவ்விடையூறுகளையெல்லாம் கடந்து வளங்கொழித்தல் வேண்டும் என்பதை உணர்ந்தவர் புலவர். ஆதலின் “மாரி வாய்க்க” என்பதோடு நில்லாது, “வளம்நனி சிறக்க” என்றும், “விளைக வயலே” என்றும், “நெற்பல் பொலிக” என்றும் கூறியுள்ளார்.