பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

123

துக்கொண்டு வெளிப்போதரும். வெளிவந்த அவை, தம் தாய் உறையும் நீர்நிலை தேடிச் செல்லத்தொடங்கும் ; அக்காலை, இடைவழியில் அவற்றிற்கு எத்தனை தடைகள் நேரினும், அவை அனைத்தினையும் கடந்து நீர்நிலை புகுந்து, விடும். தாயுறையும் நீர்நிலை அடைதல், தாயை அடைதல் போலும். ஆகவே, தடை பல நேரினும் தட்டாது நீர்நிலை அடையும் ஆமைப் பார்ப்புக்களைத் தாய்முகம் நோக்கி வளரும் தன்மையுடையன எனக் கருதினர் பழந்தமிழ் மக்கள் ; “யாமை இளம் பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசினா அங்கு.” ஆமை, முதலைபற்றி அவர் அறிந்து அறிவிப்பன இவை.

ஓரம்போகியார், நாட்டுப்பற்று நனிமிகக் கொண்ட நல்லவராவர்; நாட்டுப்பற்று மட்டும் பெற்று, அந்நாட்டை நன்னிலையில் நிறுத்தற்காம் நல்வழியினை அறியாராயின், அவர் தம் அப்பற்று, பயனற்றுப்போம். ஆனால், நம் புலவரோ, நாட்டுப் பற்றோடு, அந்நாடு, நல்வாழ்வு வாழக்காணும் நல்லறிவும் உடையராவர். அவர்தம் நாட்டுப்பற்றும், அந்நாட்டை நன்னிலைக்கண் நிறுத்த அவர் பெற்றிருந்த அரசியலறிவும், அவர் பாடிய ஐங்குறுநூற்றுப் பகுதிக்கண் உள்ள முதற்பத்தாகிய வேட்கைப்பத்தில் செய்யுட்கள் தோறும் விளங்கி நிற்றலைக் காணலாம்.

தலைவன், தலைவி ஆய இருவருள், ஆண்மகன் ஓரோ வழி அறனல்லன மேற்கொள்வனாயினும், அவன் மனைவி தன் இல்லறக் கடமையில் சிறிதும் தவறாள் என்பதைக் கூறுமுகத்தான் தன் கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்த காலத்தும், தன் வீடும், நாடும் வாழ்தலையே வேண்டி நின்ற ஒரு பெண், “நாடெலாம் வாழக்கேடெரன்றும் இல்லை.” நாடுவாழின், தன் வீடும் வாழும் என்ற நல்லறிவுடையளாகித் தன் நாடு வாழ வாழ்த்துவாள், அந்நாட்டில் இன்னின்ன நிலைபெறுக ! இன்னின்ன நில்லாது ஒழிக! எனக் கூறி வாழ்த்தினாள் எனப் பாடிப் புலவர், தம் உள்ளத்தை உலகத்தினர்க்கு உணர்த்தியுள்ளார்.