பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அதியன் விண்ணத்தனார்

 வாசையை அடிமை கொண்டவரே ஆளுந்தகுதியுடையவராவர். ஆசையை அடிமை கொண்டவர் உலகோர் போற்றும் உயர்நிலை பெறுவர்; ஆசை சென்றவழியே அறிவினைப் போகவிடுவார் ஆண்மையுடையாரன்று; ஆசை, நல்லதன் கண் சென்றவழி, அறிவு அதற்கு நற்றுணையாதலும், அவ்வாசை தீயதன் கண்ணதாய வழி, அறிவு, அவ்வாசையினை அதன்பால் செல்லவிடாது அடக்கி, நல்லதன்கண் செல்ல விடுதலும் வேண்டும். அறிவு எனப்படுவது அதுவே: ‘’சென்ற விடத்தால் செலவிடா தீதுஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு." ஆசை ஆற்றல் வாய்ந்தது; ஐந்து பெருங் பிரிவுடையது; ஒன்றை அடக்கி ஆண்டவழி, ஏனைய அடங்காது ஒடத்தொடங்கும். அவை அனைத்தையும் ஒரு சேர அடக்கி ஆளுதல் அருமையிலும் அருமையே; ஆயினும் அவற்றை அடக்கி ஆள்வதே அறிவிற்கு அழகு தரும்; அவ்வாறு அடக்கி ஆள்பவரே பெரியார்: "செயற்கு அரிய செய்வார் பெரியர், சிறியர், செயற்கரிய செய்கலா தார்." அறிவிற்கு அத்தகைய ஆற்றல் உண்டு; யானைகள் பல ஆயினும், அவை அனைத்தையும் அடக்கி ஆள ஒர் அங்குசத்தால் ஆகும்; அதைப்போல், அறிவன அறிந்த அறிவால், ஆசைகள் ஐந்தையும் அடக்கி ஆளுதல் இயலும். அத்தகைய அறிவுடையாரே பெரியார். 'உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான், வரன் என்னும் வைப்பிற்கு ஒர்வித்து.‘’ கல்வி, கேள்விகளான் ஆய செயற்கை அறிவோடு கூடிய இயற்கை அறிவே அறிவெனப்படும். இயற்கை அறிவினை வளப்படுத்துவது, கல்வி, கேள்வியான் வரும் செயற்கை அறிவே. அத்தகைய அறிவுடையார்க்கே ஐம்புலன்களை அடக்கி ஆளவல்ல ஆற்றல் உண்டாம்.

ஆகவே, பெரியார் எனப்படுவார் நல்லதன் நலனும், தீயதன் தீமையும் உள்ளவாறுணர்ந்து, தீயன ஒழிந்து நல்லன. மேற்கொள்ளும் நல்லறிவுடையராவர். எக்காரியத்தினையும், இவ்வாறு ஆராய்ந்தன்றி, அவர் மேற்கொள்ளார், ஆகவே, அவர் செயலில் தவறு நிகழ்தல் இல்லை,