பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

131

“காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.”

(குறுங் : ௧௦)

ஒருகுடியிற் பிறந்த பல்லோருள்ளும், ஒருவன் பெறும் உயர்வு தாழ்வுகள் அக்குடியிற் பிறந்தார் பலரையும் சாரும். ஆகவே, ஒரு குடியிற் பிறந்த ஒவ்வொருவரும் நல்லவராதல் வேண்டும் என்பதில், அக்குடியிற் பிறந்தார் அனைவரும் நாட்டமுடையராதல்வேண்டும். அழுக்காறுடையான் ஒருவன் மட்டுமே, உடுப்பனவும், உண்பனவும் இருந்து கெடுவன் என எண்ணற்க; அவன் சுற்றத்தார் அனைவருமே அவற்றை இழந்து கெடுவர்; “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம், உண்பதூஉம் இன்றிக் கெடும்” என வள்ளுவரும் கூறுதல் காண்க. இக் கருத்தினையும் புலவர் ஓரம்போகியார் உணர்ந்து வற்புறுத்தியுள்ளார். தன் கணவன் பரத்தையரொழுக்கம் மேற்கொண்டமை கண்டு சினந்தாளொரு தலைவி, தலைவனுக்கு நண்பனாய், அவன் தவறுகளுக்குத் துணைபுரிந்தான் பாணன் ஒருவனே ஆகவும், அப் பாண்குடியிற் பிறந்தார் அனைவருமே பொய்யொழுக்கமுடையராவர் எனப் பழித்தாள் எனப் பாடியுள்ளமை காண்க.

“ஒருநின் பரணன் பொய்ய னாக
உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர் நீ அகன்றிசி னோர்க்கே.”

(குறுந் : ௧௨௭)

“ஆசைக்கோர். அளவில்லை” என்ப; ஆசையை அடக்கி ஆளுதல் அத்துணை எளிதன்று; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது. ஆசை, ஐந்து பெரும் பிரிவினை உடையது: மெய், வாய், கண், மூக்கு, காது இவ்வைந்தின் வழியானும் அவ்வாசை வெளிப்படும்: இத்தகைய ஆசைகளை அடக்கி ஆள்பவரே பெரியாராவர். அவ்வாசைக்கு அடிமைப்பட்டவரே சிறியர்; ஆசைக்கு அடிமைப்பட்டவர் ஆளத் தகுதியற்றவராவர்; அவ்-