பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அதியன் விண்ணத்தனார்


தாம் செய்த கொடுமையால் இன்னலுற்றார் ஒருவரைப் பின்னோருகால் காண நேர்ந்தவழி, பண்டுதாம் அவர்க்குச் செய்த இன்னாமையினை உளத்தே உடையராய்த் தமக்கு ஊறுவிளைப்பரோ என அஞ்சி அஞ்சிச் சென்றக்கால், இன்னலுற்றார், அவ்வின்னாதவற்றை அறியார்போன்று, அன்புகாட்டி வரவேற்பராயின், அந்நிலையில் அவ் வின்னாதன செய்தார் உள்ளம் படும் துன்பத்திற்கு ஒர் அளவே இராது அந்நிலையில் அவர் தம்மை ஒறுத் திருப்பினும் அத்துணைத் துயர் உறார் : அவர் உள்ளம் அத்துணைப் பெருந்துயர் உறும். கொடுமை செய்தாரை ஒறுப்பதால் உண்டாம் துயரினும், அவர்பால் அன்பு காட்டுவதால் தரும் துயரம் அம்மம்ம கொடிது கொடிது! இவ்வுண்மையினை உணர்ந்தார் உலகத்தில் சிலரே; துன்பம் தந்தார்க்கு இன்பம் தருவார் அரியர் இவ்வுலகத்தில். விரிந்த உள்ளமும் சிறந்த ஒழுக்கமும் உடையார்க்கன்றி இப்பண்பு உண்டாதல் இல்லை. ‘’இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண, நன்னயம் செய்து விடல்.‘’ வள்ளுவர் வழிவந்தார்க்கன்றி அவ்வுள்ளம் வாய்த்தல் அரிது. தமிழ் மகள் ஒருத்தி இப்பண்புடையளாதல் கண்டு பாராட்டியுள்ளார். புலவர் ஒரம்போகியார்.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்த ஒரு தலைவன், தன் தவற்றினை ஒருவாறு உணர்ந்து உளம் வெட்கினான்; உணர்ந்து தன் மனைபுகும் அவன், மனைவி தன் தவறுகண்டு வெறுத்து ஒறுப்பளோ என அஞ்சி, அஞ்சி உட்புகலாயினன். அந்நிலையில் அவன் எதிரே வந்தாள் அவன் மனைவி; சினத்தால் கண்கள் சிவப்பேறக் கடுஞ்சொல் வழங்கிக் கழறுவள் என எதிர்பார்த்து நிற்க, அவள் இன்முகம் காட்டி அன்புரை வழங்கி வரவேற்பதைக் கண்டான் : அடித்து அறிவூட்டவேண்டிய அவள், அன்பு காட்டி வரவேற்றல், ஆயிரம் வேல்கொண்டு தாக்கியது போல் தோன்றித் துயர்விளைத்தது. நாணித் தலைகுனிந்து கடந்தான். அவன் சிறுமையும், அவள் பெருமையும் புலவர் உள்த்தே ஆழப் பதிய அழகிய பாட்டால் அவளைப் பாராட்டுவாராயினர்.